Sunday, August 29, 2010

சட்டி சுட்டதடா

இந்தியாவின் தலை என்று வர்ணிக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றுவதால் ராணுவ தளபதிக்கு விசா வழங்க மறுத்து சீனா இந்திய அரசின் மூக்கை உடைத்துள்ளது.
 இது முதல் முறை அல்ல, இது போன்று பல வகைகளில் சீனா நம்மை சீண்டி பார்க்கிறது. ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளையும், அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீன அரசு உரிமை கொண்டாடுகிறது
அவர்கள் தங்கள் எல்லையை நகர்த்தி கொண்டே நமது இந்திய எல்லையை தாண்டி உள்ளே வந்துவிட்டதாகவும் பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. உயர் கோபுரங்கள், தொடர் வண்டி நிலையங்கள், இருப்பு பாதைகள் இன்னும் பலவற்றை சீன அரசு அமைத்துவிட்டது இருப்பினும் இந்திய அரசு அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு
கூகிளும் தன் பங்கிற்க்கு இந்திய வரை பட எல்லையை மாற்றி காட்டி சீனா துணையுடன் இந்தியாவை சீண்டுகிறது முன்பு பாகிஸ்தான் மட்டுமே ஜம்மு காஷ்மீர் பகுதியை சொந்தம் கொண்டாடியது, இப்போழுது சீனாவும் கைகோர்த்துள்ளது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்டில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்துள்ளது
நமது அரசும் வழக்கம் போல இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நல்லுறவு நல்லுறவு என்று பல்லிளித்து கொண்டிருக்கிறது. சீனா நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தமது தளங்களை பகிரங்கமாக அமைத்து வருகிறது இலங்கைக்கு புனரமைப்பு நிதி என்கிற பேரில் பெரிய துறைமுகமே இலவசமாக அமைத்து தருகிறது, இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக கடல் வழி தாக்குதலுக்கும் தயார் செய்வதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன இதை எல்லாம் தூக்கி போடும் செய்தியாக அருணாசல பிரதேச மக்கள் யாராவது சீனாவிற்கு செல்ல சீன தூதரகத்தில் விசா அனுமதி கேட்டால் நகைப்பாக நமது நாட்டிற்குள் எதற்கு விசா என்று பதில் வருகிறதாம். என்ன ஒரு திமிர், அருணாசல பிரதேசம் நமது இந்திய பகுதியா அல்லது சீனவின் பிரதேசமா ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு வேளை அதையும் விற்றுவிட்டர்களோ என்னவோ......?  சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இப்போழுதே கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று பாடுவதில் பலன் ஒன்றும் இருக்காது.

Thursday, August 26, 2010

இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு

சதுரங்க உலகின் சக்கரவர்த்தி,

மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து உலக சாம்பியன்
பத்மபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு வீரன்
ஆனால் தமிழனாய் பிறந்த ஒரு காரணத்தினால்  
"இந்தியனா"  அல்லது  "அந்நியனா"
என்று  சந்தேகம் கிளப்பி நோகடித்துள்ளது மத்திய மனித வள மேம்பாட்டு துறை. டாக்டர் பட்டம் வழங்க  ஹைதராபாத் பல்கலைகழகம் தீர்மானித்து மத்திய அரசு ஒப்புதலுக்காக காத்திருந்த போது இந்த சர்சையை அவிழ்த்து விட்டு சதுரங்க உலகின் சக்கரவர்த்தி ஆனந்தை கேவலப்படுத்தியுள்ளது

சர்வதேச போட்டிகளில் விளையாட ஏதுவாக ஸ்பெயினில் குடியிருந்து வருவதால் அவர் இந்தியன் இல்லை என்பதா.....?  கவுரவ பட்டத்திற்க்கும் குடியுரிமைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது பிறகு ஏன் இந்த விஷமத்தனம் 

அட மத்திய அரசு தான் தமிழனை புறக்கணிக்கிறது என்றால்
அருகில் இருக்கும் கேரளாவுமா.....?
கலைக்கு மொழி வேறுபாடுகள் கிடையாது என்று கூறப்படுகிறது ஆனால் அதற்கும் உண்டு என்று நிருபித்துள்ளது கேரள திரை உலகம்.

 பல மொழிகளில் நடித்து இன்று சிறந்த நடிகன் என்று கூறப்படும் நடிகர் கமல்ஹாசனை பாராட்டி கேரள அரசு எடுத்த விழாவை புறக்கணித்து தமிழனுக்கு கேரள மண்ணில் பாராட்டு விழாவா......?
என்று ஒட்டு மொத்த திரை உலகும் புறக்கணித்து கலைக்கும் மொழிக்கும் வேறுபாடு உண்டு என்று பதிவு செய்துள்ளது.

நாம் இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு
என்று பாடி கொண்டு திரிகிறோம்
ஆனால் தொடர்ந்து
தமிழன் என்பதால் பல வழிகளில் புறக்கணிக்க படுகிறான் என்பதே உண்மை. 

Tuesday, August 24, 2010

இது வரை

திரைப்படதுறை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்காக சென்னை அருகே பையனூரில் 15 ஆயிரம் வீடுகள் அரசு சார்பாக கட்டிதர ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு கலைஞர் நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது வீடு கட்ட அடிக்கல் நாட்டும் விழா சென்னையில் நடைபெற்றது.

15 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்க்கு மகிழ்ச்சி தான் திரை உலகில் நீங்கள் 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளீர்கள் அதற்காக இந்த கைமாறு சரி தான் படப்பிடிப்புக்கு கட்டணம் குறைப்பு, தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்காக தயாரிக்கபடும் தமிழ் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்தால் வரிச்சலுகை, தமிழ் பெயரிட்டால் கேளிக்கை வரி இல்லவே இல்லை என்ற கேலிகூத்தான அறிவிப்பு 23ம் புலிகேசி போல் அறிவித்தீர்கள்.

வாரிசு அரசியல் பற்றி பேசியுள்ளீர்கள் கபூர் குடும்பத்தினர், நேரு குடும்பத்தினர், இன்னும் பல குடும்பங்களை பற்றி பேசியுளீர்கள்  உங்கள் சந்ததியினர் திரைதுறையில்  வருவதை யாரும் எதிர்க்கவில்லை வரவேற்க தான் செய்கிறார்கள். திரை உலகும் அரசியல் உலகும் உங்கள் இரு கண்கள் என்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் இருந்தாலும்,
தொடர்ந்து திரைதுறையினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பது
மக்களிடையே சிறிது அதிருப்தி ஏற்ப்பட்டுத்தியுள்ளது

ஒட்டு மொத்த மக்கள் வரிபணத்தை இப்படி வாரி கொடுத்து
ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் பயனடைய செய்வது உண்மையில் எந்த வகையில் நியாயம், தமிழ் நாட்டில் வீடில்லாதவர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்க திரைபடதுறையினருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ....... ?

திரை படதுறை பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தால் இந்த சலுகை சரி தான் ஆனால் நடப்பது என்ன ......... ?,  தங்கள் பேரங்களால் இந்தியாவிலேயே அதிகமான பொருட்செலவில் தயாரிக்கபடும் திரைப்படம் என்று கூறப்பட்டு  மலேசியாவில் அதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதற்கு கூட நீங்கள் வாழ்த்து சொன்னீர்களே இங்கு சமீபத்தில் எடுக்கப் படும் திரைபடங்கள் அனைத்தும் பல கோடிகள் செலவழித்து எடுக்க படும் திரைபடங்கள் என்று தங்களுக்கு தெரியாதா....? 
தங்கள் பேரன்களால்   எடுக்கும் படங்கள் அனைத்தும் கோடிகணக்கில் செலவழித்து பல கோடிகள் லாபத்துடனேயே விற்கபடுகிறது. 

இப்படி பல கோடிகள் லாபம் ஈட்டும் தொழிலாக இன்று வளர்ந்து நிற்கிறது திரை உலகம், எத்தனை நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று தங்களுக்கு தெரியாதா ...... ?

ஏன் அவர்கள் எல்லாம் இதில் பங்கெடுத்து கொள்ள கூடாது
இந்த சின்ன சின்ன கலைஞர்களை வைத்து தானே இவர்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள் அவர்கள் அனைவரும் சிறு சிறு பண உதவிகளை ஏன் செய்யவில்லை நீங்கள் ஏன் அதை முன் வைக்கவில்லை......?
 முழுக்க முழுக்க அரசு வரிபணத்தை கொண்டே செயல் படுத்தினால் தான் நடக்குமா ......... ?
 நீங்கள் சொன்னால் ரஜினி, கமல், சரத்குமார், ராதிகா, சூர்யா, படத்தயாரிப்பில் ஈடுபடும் உங்கள் பேரன்கள்,சன் குழுமத்தினர்,தயாரிப்பளர்கள் இசை அமைப்பளர்கள் ரகுமான், இளையராஜா இப்படி பல பேர் செழிப்புடனே இருக்க மக்கள் வரிபணத்தை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள் ............. ?

 திரை உலகு மிகுந்த செழிப்புடன் தான் செயல்படுகிறது உங்களை யாரும் திரைதுறையினரிடமிருந்து பிரிக்க முற்படவில்லை
நீங்கள் கவலையும் கொள்ள தேவையில்லை அப்படி கவலை படுவதென்றால் நாட்டு ஏழை எளிய மக்களை பற்றி கவலை படுங்கள்,

மின்பற்றாகுறையை பற்றி கவலை படுங்கள், சென்னை தவிர்த்து எந்த ஊரிலாவது உருப்படியான சாலை இருக்கிறதா அதை பற்றி கவலை படுங்கள் சமுதாயத்தில் யாருக்கு கேடு வரினும் அவற்றில் என்னையும் இணைத்து கொண்டு அதை நீக்குவதிலே முதல் ஆளாக இருப்பேன் என்று கூறியுள்ளீர்கள் வரும் தேர்தலிலே உங்கள் கண்ணுக்கு கண்ணான திரைதுறை கண்மணிகள்  எத்தனை பேர் அ.தி.மு.க பக்கம் சாய்கிறார்கள் என்று அனைவரும் பார்க்கதான் போகிறோம். இது வரை நீங்கள் அள்ளி கொடுத்தது போதும் ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது பயனுள்ள வகையில் செய்ய முற்படுங்கள்
ஐயா ....

Sunday, August 22, 2010

கோடான கோடி

இந்தியாவில் 26 கோடியே 3 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.இவர்களில் கிராமப்புறங்களில் 19 கோடியே 32 லட்சம் பேரும், நகரங்களில் 6 கோடியே 71 லட்சம் பேரும் வசிக்கின்றனர். இது தவிர 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது
பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக, பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் 1000 ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுதவிர, மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி.,க்கும் தொகுதி அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. வருடத்திற்க்கு 30 முறை இலவச விமான பயணங்கள் மற்றும் அளவில்லா இலவச முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடு, இவர்கள் செல்லும் வாகனங்களுக்கு 1 கி.மீக்கு 13ரூபாய் போன்ற சலுகைகளும் உண்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 1 வருடத்திற்க்கு ஆகும் செலவு 37 லட்சம். 37 X (552+250)802 = 2967400000  இப்படி ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில 25 பேருக்கு ஒருவேளை நல்ல உணவு கிடையாது, விவசாய விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடையாது, இன்னும் சில கிராமங்களில் அடிப்படை கூட வசதி கிடையாது, இன்னும் எவ்வளவோ இருக்கு. அத பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலையே கிடையாது இவர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு சம்பளம் ஒரு கேடு மக்கள் பிரச்சனை தீர இவர்கள் ஏதுவும் பாரளுமன்றத்தில் பேசுவது இல்லை மக்களுக்கு சேவை செய்வதற்கு இவர்களுக்கு எதற்கு ஊதியம்.......? அதுவும் போதாதாம் இவர்கள் எதை வெட்டி முறிக்கிறார்கள் இவர்கள் அமெரிக்காவை உதாரணமாக கூறுகிறார்கள் அவர்கள் பெறுவதோ 13000 டாலர்கள் அப்படி பார்த்தால் இங்கே 1 ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு தான் அங்கே 1 டாலருக்கு இருக்கும் இவர்கள் 13000U.S.D X 47 = 611000 இந்திய ரூபாய் மதிப்புக்கு சம்பளம் கேட்கிறார்கள் உங்க கணக்குல தீய வச்சு கொளுத்த அவர்கள் 40% சதவிதம் வருமான வரியாக செலுத்துகின்றனர் ஆனால் நீங்களோ எல்லா வகையிலும் கொள்ளை, கொள்ளை, கொள்ளை, கோடான கோடி மக்கள் வரிப்பணத்தை உங்கள் சொகுசு வாழ்விற்க்கு பயன்படுத்தி கொண்டு நீங்கள்  சம்பள உயர்வு கேட்பது வெட்ககேடு. 

Friday, August 20, 2010

தங்க சூரியனே

இயற்கை வளங்கள் அனைத்தையும்  நம் வசதிக்காக அழித்து பூமியை பாலை வனமாக மாற்றியது தான் மிச்சம் பூமியில் கிடைக்கும் மண், கல், மலைகள், மரங்கள், இப்போ கடல் தண்ணீர் அதையும் பயன் படுத்த தொடங்கியாச்சு அனைத்தையும் கிட்ட தட்ட எல்லாவற்றையும் பயன் படுத்தி விட்டோம். இவை அனைத்துமே திரும்ப பெற முடியாதவை ஆனால் இந்த சூரியனை மட்டும் பயன் படுத்த மறுப்பது ஏனோ....? இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளை களைய வேண்டும்
ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.
சுதந்திர தின விழாவில் விவசயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். ஏற்கனவே இங்கு மின் பிரச்சனை கடந்த இரண்டு வருடமாக தலை விரித்து ஆடி கொண்டிருக்கிறது அதை தீர்க்க வழியில்லை இதிலே மின் மோட்டார் வேறு இதற்கு மட்டும் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்......? நான் விவசயிகளுக்கு சலுகை தர வேண்டாம் என்று சொல்லவில்லை விவசாயம் தான் உயிர் நாடி. விவசயிகளுக்கும் பயன் இருக்க வேண்டும் அதே நேரத்தில் அரசுக்கும் மின் பிரச்சனையும் இருக்க கூடாது அதற்கு ஒரே வழி பஞ்சாப் போன்ற மாநிலங்களை பின் பற்றுவதில் தவறில்லை அங்கே மின் பிரச்சனை எழுந்த போது விவசயிகளுக்கு சூரிய ஓளி மின் திட்டம் அறிமுக படுத்தபட்டது இந்த திட்டத்திற்க்கான நிதி 40% மாநில அரசும் 40% மத்திய அரசும் 20% விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்த படுகிறது விவசாயிகளுக்கும் தொல்லை இல்லை அரசுக்கும் சுமை இல்லை. கலைஞர் சூரிய ஓளி மின் திட்டம் என்று பெயர் வைத்து செயல்படுத்தினாலும் பரவாயில்லை, உங்கள் கட்சியின் சின்னமும் அதில் இருப்பதால் நீங்கள் பிரச்சாரம் செய்வது எளிதாகி விடும் இது போன்று சூரிய ஓளி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்த பட்டால் திறந்த மனதுடன் சொல்கிறேன் என் ஓட்டு  நிச்சயம் சூரியனுக்கே விவசாயிகள் ஓட்டும் இதை செயல் படுத்தும் அரசுக்கே என்பதில் சந்தேகம் இல்லை வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதை விட்டு சூரியனை வைத்தே ஓட்டுகள் பெறலாம் தங்க சூரியனே என்று விவசாயிகள் உங்களை அழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, August 19, 2010

வாம்மா துரையம்மா

இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரம் சிறப்பு தூதர் செல்வார் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த மத்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் கூறியுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை பற்றி முதல்வர் கருணாநிதியுடன் விவாதித்தாக கூறியுள்ளார். இலங்கை தமிழர் நிலை குறித்தும் இலங்கை தமிழர் நல்வாழ்வு குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறதாம். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, போர் முடிந்த பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு பற்றியும், மறு குடியமர்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும் பேசியதாக கூறியுள்ளார். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த பிரச்னையில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கள் வீடு திரும்ப, இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும். தமிழர் பகுதியில் விவசாயம் மீண்டும் தொடங்கவும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீண்டும் இயங்கவும் மத்திய அரசு மிக விரிவான திட்டம் செயல்படுத்தப்படுமாம். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 2.5 லட்சம் வீட்டு உபயோக பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளை தமிழக அரசு வழங்கியுள்ளதாகவும். 50000 வீடுகள் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் சொங்கின்ற படி அங்கு நடந்தால் தமிழ் மக்கள் சார்பாக அவரை வாம்மா துரையம்மா என பாட்டு பாடி அழைக்கிறோம்  இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனாக இருக்குமானால் நல்லது தான். ராஜபட்சே தனது குள்ளநரி வேலயை காட்டமல் இருந்தால் சரி,  தமிழர்கள் புனரமைப்புக்காக பிற நாடுகள் தரும் நிதியை சிங்களவருக்கு பயன்படுத்தாமல் இருக்க அனைத்து நாடுகளும் ஒரு தூதரை அனுப்பினால் நல்லது.

Wednesday, August 18, 2010

மோதி விளையாடு

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் சேவக் 99 ஓட்டம் எடுத்திருந்த நிலையில்,
இவரது சதம் மற்றும் அணியின் வெற்றிக்கும் ஒரு ஓட்டம் மட்டுமே தேவைப்பட்டது.
அந்த நேரத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்திவ், வேண்டுமென்றே "நோ- பால்' வீசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றது. போட்டி முடிவுக்கு வந்ததால், "நோ பாலில்' அடித்த சிக்சர் வீணாகி, தனது 13வது சதத்தை எட்ட முடியாத சோகத்தில் வெளியேறினார் சேவக்.
இப்பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது.
ரந்திவ் செயலை கிரிக்கெட் உலகம் கண்டித்துள்ளது.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) சார்பில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கப் பட்டுள்ளது.
அட இந்த அரசியல்வாதிகள் தான்  எதிர் கட்சியை வீழ்த்துவதற்க்கு பல குள்ள நரி வேலை, குறுக்கு வழிகளை கையாள்வார்கள்.
ஆனால் இது
விளையட்டல்லவா....?
இதிலுமா.....?
வீளையாட்டில் இவ்வளவு விரோத போக்கோடு விளையாட வேண்டுமா
இரு நாடுகள் நட்புறவு மேலோங்கத்தான் இது போன்ற விளையாட்டுகள் நடத்தபடுகின்றன
ஆனால் இங்கே நடப்பது என்ன....?
ஏதோ இரு நாடுகள் போரிட்டு கொள்வது போல மோதி கொள்கிறார்கள்
இது இரு நாட்டு மக்களிடையே பகைமை உணர்வை தான் வளர்க்கும். விளையாட்டு வீரர்கள் போர் வீர்கள் அல்லவே...
விளையாட்டு வீரர்கள் வெற்றி தோல்வி இரு நிலைகளையும் சமமாக பாவிக்க வேண்டும்
வெற்றி பெற்றால் ஆனந்த கூத்தாடுவது,
தோல்வியுற்றால் துவண்டுவிடுவது பிறகு,
எதிரணியினரை திட்டுவது,
சக வீரர்களை குறை சொல்வது,
நடுவர்களை குறை சொல்வது,
தரகுறைவாக மைதானங்களில் நடந்து கொள்வது,
இது பொன்ற செயல்கள் தொடர்வதால் பகைமை உணர்வு தான் வளரும். அணியை வழி நடத்துபவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்
இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது,
விளையாட்டில் மோதும் இரு அணிகளும் சகோதர உணர்வுடன் விளையாடி இரு நாடுகளுக்கும் சகோதர உணர்வை வளர்க்க வேண்டும்
அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்
அதை விடுத்து மோதி விளையாடு என்று விளையாட கூடாது.

Tuesday, August 17, 2010

ஆடாத ஆட்டமெல்லாம்

பதவியில் இருந்த போது தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் குருதியில் ராஜபட்சவை மகிழ்வித்த அதே பொன் சேகா  ராஜபட்சவை எதிர்த்ததால் இன்று சிறையில். இலங்கை ராணுவத்தில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற அதிகாரியாக இருந்த பொன்சேகா. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு  அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா அரசியலில் இடம் பிடிக்க பல்வேறு சதித் திட்டங்களில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டு.  ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் மீதான புகார் உண்மை என்று உறுதி செய்யப்பட்டு, ராணுவ அந்தஸ்து, பதக்கம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை பறிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஒப்புதல் அளிக்கும் ஆணையில் அதிபர் ராஜபட்ச சனிக்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து, பொன்சேகா கடந்த 40 ஆண்டுகளில் பெற்ற அனைத்து பதவி உயர்வு, பதக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கௌரவங்களும் பறிக்கப்படுகிறது. கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி என்று சோக பாடல் பாடி கொண்டிருக்கிறார் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ள பல வாக்குமூலம் அளித்தும், ராஜபட்சவிடம் தோல்வி அடைந்தது தான் மிச்சம், போரின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி வந்தவர்களையும் சுட்டு கொன்று வெற்றி இறுமாப்பில் எத்தனை எத்த்னை உயிர்களை கொன்று குவித்து ராஜபட்சேவை மகிழ்வித்த பொன்சேகா இன்று அதெற்க்கெல்லாம் அனுபவித்து வருகிறார். இவருக்கு சில போலி தமிழ் அமைப்புகளும் ஆதரவு பதவியில் இருந்த போது வீறு நடை போட்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஆடி அடங்கும் வாழ்கையடா என்று கம்பிகளுக்கிடையே சோக நடை நடந்து  கொண்டிருக்கிறார்

Sunday, August 15, 2010

ஜெய் ஹிந்த்

இன்று நாட்டின் 64ம் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது,
நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது, 
டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7 மணிக்கு தேசிய கொடியை 
ஏற்றி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறாராம். 
விழாவில், சோனியா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், 
மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனராம். 
இதையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாம். 
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம்.
செங்கோட்டையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாம். 
இதுதவிர, தீவிரவாதிகளை கண்டதும் சுடுவதற்காக தேசிய கமாண்டோ படை வீரர்களும் செங்கோட்டையின் உயர்ந்த கட்டிடங்களில் நிறுத்தப்படவுள்ளனராம். 
இதுதவிர, விரைவு அதிரடிப்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனராம். 
பிரதமர் மற்றும் தலைவர்கள் உரையாற்றும்போது வானில் ஹெலிகாப்டர்களில் சுற்றியபடிஅதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப் படவுள்ளனராம். 
நாடாளுமன்ற வளாகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 
தொடர் வண்டி நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், வெளிமாநில பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். 
மேலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக டெல்லியின் எல்லைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனராம்.
என்ன நடக்கிறது.....?  
இந்திய பிரதமர் வெளி நாட்டில் சென்றா விழா கொண்டாடுகிறார்......?  
வருடா வருடம் இதே கேவலமான நிலை தான். 
சுதந்திர தின உறையாற்றும் போது குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டில் நின்று கொண்டு தான் 64 வருட சிறப்பு மிக்க 
இந்திய திருநாட்டின் 100 கோடி மக்களுக்குகான தலைவர் பேசுவார் 
இவரை பாதுக்காக்கவே இத்தனை கூத்துக்கள் 
இவர்கள் எங்கே மக்களை பாதுகாக்க போகிறார்கள் 
சுதந்திர தின ஊர்வலத்தில் அத்தனை ரானுவ தளவாடங்களும்  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், பீரங்கிகள், போர் ஆயுதங்கள் ஊர்வலத்தில் பார்வைக்கு வரும். 
இவை அனைத்தும் சர்வதேச நாடுகளிடம் பெருமை பீற்றி கொள்ள தான் இந்த ஊர்வலம். 
எங்களிடம் இவ்வளவு ஆயுதங்கள் உள்ளது ஆகவே அண்டை நாடுகள் ஜாக்கிரதை என்று மிரட்டுவதற்க்கும் தான் இந்த ஊர்வலம். 
ஆனால் இங்கே நிலைமையே வேறு உள்ளூர் தீவிரவாதிகளை ஒடுக்கவே துப்பில்லாத இந்த அரசு, எங்கே அடுத்த நாடுகளை மிரட்ட 
சுதந்திர தின கொண்டாட்டத்திற்க்கு மட்டும் பல கோடி செலவு 
எதற்கு இந்த வீண் விளம்பரம்........? 
ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது 
" குடிக்க கஞ்சி இல்லையாம் ஆனால் கொப்புளிப்பது பன்னீரில்" 
அது போல தான் இவர்கள் செயல் பாடுகள். 
64 ஆண்டுகள் ஆகியும் அனைவருக்கும் 
அடிப்படை வசிதிகள், 
சுகாதாரமான குடிநீர், 
வாழ்வாதாரம், 
பாதுகாப்பு, 
உள்ளிட்ட எதையும் இத்தனை ஆண்டுகளாக ஆண்ட அரசுகள் இது வரை செய்யவில்லை 
இன்றும் வறுமை கோட்டிற்க்கு கீழே எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலை கூட இந்த அரசுகள் வெளியிடுவதில்லை, 
இவரகள் செய்ததெல்லாம் 
அன்னிய நாட்டு முதலாளிகளுக்கு 
குனிந்து குனிந்து கும்பிடு போட்டு 
இந்திய நாட்டை கூறு போட்டு விற்றது தான். 
தவிர 100 கோடி இந்திய மக்கள் இருந்தும் அதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்து எடுக்க முடியவில்லை 
ஒரு அயல் நாட்டு பெண்னை தான் தலைவராக ஏற்று கொண்டுள்ளனர் 
ஏன் என்றால் இங்கு ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லையாம் 
இந்தியனின் போறாத காலம் இன்னும் எத்தனை காலம் தான் 
அன்னியன் நம் நாட்டை ஆளப்போகிறானோ தெரியவில்லை 
ஆள்கின்ற கொள்ளையர்கள் கொள்ளை அடித்து கொண்டு போய் 
அயல் நாட்டு வங்கிகளில் முடக்கியுள்ள பணம் போக மீதி தான் 
இங்கே வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தபடுகிறது 
ஊழலற்ற ஆட்சி நடத்த எந்த கட்சி தயாராக உள்ளது 
எது எப்படியோ  
சுதந்திர தினத்தில் 
செங்கோட்டையில் தொடர்ந்து 
7 முறையாக நேருவின் குடும்பத்தினர் அல்லாதவர் ஏற்றும் தேசிய கொடி இன்று பறக்கிறது 
அதற்க்காவது ஒரு முறை உறக்க சொல்லுவோம் ஜெய் ஹிந்த்.

 

Saturday, August 14, 2010

நான் அவன் இல்லை

போபால் விஷ வாயு வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்த வேளையில் பாராளுமன்றத்தில் ஒரு வழியாக உள்துறை அமைச்சர் அனைத்திற்க்கும் பதில் அளித்து விட்டார்.

2001ல் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அப்போதே இந்த கேள்வியை கேட்டிருந்தால், அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் எளிதாக விடை கிடைத்திருக்குமாம். ஆன்டர்சனை கைது செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது அப்போதைய மாநில முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் இது தொடர்பாக அவர் ராஜிவ் உட்பட யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லையாம்.

ஆன்டர்சனை, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அர்ஜுன் சிங் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையாம். பத்திரிகைகளிலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியிட்டுள்ளனவாம். இதில் ஆன்டர்சனை தப்பவிட்டதில் ராஜிவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லையாம் ஆன்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்பது தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்தை இதற்கு முன் அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாம்.

விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும். ஆன்டர்சனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி அமெரிக்காவிடம் இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுமென்று சிதம்பரம் திருவாய் மலர்ந்து கூறியுள்ளார்.

ஆண்டர்சன் தப்பியதில் ராஜீவுக்கு தொடர்பில்லையாம் அமெரிக்காவையும் குற்றம் சொல்வது வீன் வேலையாம், ஆண்டர்சன் எப்படி தப்பித்தார் என்றே தெரியாது என்கிறார்

இன்னும் சிறிது நாட்கள் சென்றால் அண்டர்சன் யார் என்றே தெரியாது என்பார் அப்புறம் பாருங்கள் போபால் சம்பவமே நடக்கவில்லை என்று சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை.

யார் தான் அந்த துயர சம்பவத்திற்க்கு பொறுப்பு.....?  
இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்க்கு அரசு பொறுப்பேற்க்க முடியாது என்றால் என்ன அர்த்தம்.........?

ஆட்சியில் உடகார்ந்து கொண்டு மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்கிறார்கள்.
மக்களின் உயிர் இவர்களுக்கு மயிருக்கு சமானம் 
போனால் போகட்டும் போடா என்றே நினைக்கிறார்கள்.
ஒரு நாள் ஆட்சி முடிந்து,
பதவி இழந்து,
அடுத்த முறை ஓட்டு கேட்டு செல்லும் போது யாராவது போபால் தொடர்பாக கேள்வி ஏதாவது கேட்டால் 
 நான் அவன் இல்லை
என்று சொல்லுவார்கள் இந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரர்கள். 

Thursday, August 12, 2010

ஏன் பெண் என்று பிறந்தாய்

செய்தி-1
கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார்,

அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார்,
ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்து. அங்கிருந்து தப்பிச் சென்றார்.

ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.

உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார்.

இதன்பின், அவரது மூக்கையும் துண்டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.
இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார்.

அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்

செய்தி-2
ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் "கேங் ரேப்பிங் ' கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் "அட்மிஷன்' போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.

இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த "ஆபரேசனை' முடித்துள்ளனர்.

வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

"கேங் ரேப்பில்' ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.
 இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, "கிரீன் சிக்னல்' கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது.

செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த "ஹம்லா ஆபரேசனில்' கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்த வெறி பிடித்த மிருகத்தை பிடிக்க முதல்வரிடம் அனுமதி கேட்டு பிறகு அவர் அனுமதித்த பிறகே கைது படலம் நடந்தேறியுள்ளது.
இது போன்ற கேவலமான நிகழ்வுக்கெல்லாம் முதல்வர் தலையீடு இருக்குமென்றால், என்ன கொடுமை இது
மிருகங்கள் போல கூட்டமாக இதில் ஈடுபட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.இரண்டு செய்திகளிலிலும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியுள்ளனர்.

நான் பதிவுலகில் சமீபமாக தான் எழுதி வருகிறேன் எனக்கு தெரிந்து பெண்கள் ஒரு சிலரே பதிவு எழுதி வருகின்றனர் அவர்களும் சமையல் குறிப்பு, பிளாகர் ஆலோசனை, அழகு குறிப்பு, கவிதை, கட்டுரை சிறு கதை இது போன்ற தலைப்புகளிலே தான் எழுதி வருகின்றனர்.
பெண்ணடிமை குறித்து எவரும் எழுதுவதில்லை இது போன்ற செய்திகளை படித்தும் கூட கண்டித்து ஒரு பதிவு கூட எழுதுவதில்லை பதிவுலகில் பெண்கள் நிறைய வரவேண்டும் என்பதே என் ஆசை
எல்லா துறைகளிலும் இன்று ஆண்களுக்கு இணையாக நிற்கும் பெண்கள் ஏன் பதிவுலகில் முத்திரை பதிக்கவில்லை
இந்த பதிவை படித்து ஒரு பெண் புதிதாக பதிவெழுத வந்தால் கூட எனக்கு  மகிழ்ச்சியே  
ஏன் பெண் என்று பிறந்தாய்
என்று வருந்திய காலம் மலையேறி விட்டது பெண் பிள்ளை இருந்தால் போதும் என்ற காலம் வந்துவிட்டது. 

Saturday, August 7, 2010

வாரணம் ஆயிரம்

காட்டு விலங்குகளை வீட்டில் வளர்த்தால் குற்றம்,
விலங்குகளை துன்புறுத்தினால் மிருக வதை தடுப்பு சட்டம், 
புளு கிராஸ் போன்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் நாய், பூனை, உள்ளிட்ட அனைத்து விலங்குகளை பாதுகாக்க இன்னும் பல அமைப்புகள் உள்ளது.
சமீபத்தில் கூட புலிகள் எண்ணிக்கையை வெளியிட்டு அதை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி இருக்கிறது.
இது போக மேனகா காந்தி போன்றவர்கள் மிருக வதைகளுக்கு எதிராக, பலமாக குரல் கொடுத்து வருகிறார்கள் எல்லாம் சரி தான் கோவில்களில் யானைகளை கட்டிப்போட்டு ஆசீர்வதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க வைக்கின்றனரே அதை ஏன் இத்தனை விலங்குகள் பாதுகாவலர்கள், புளு கிராஸ்  அமைப்புகள் கண்டிக்கவில்லை
ஆன்மீகம் என்ற போர்வையில் இவர்கள் செய்வது மிருகவதை இல்லையா.....? 
இல்லை அதில் தலையிட்டால் மதவாதிகள் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்ற பயமா.....?  
கோடான கோடி உண்டியல் பணத்தில் திளைக்கும் கோவில்கள் ஏன் யானையை வைத்து கேவலமாக பிச்சை எடுத்து வருகிறது....?
ஆத்திகம் பேசும் பெரியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள். 
சென்ற ஆட்சியில் வருடா வருடம் கோவில் யானைகளை சுற்றுலா கூட்டி சென்று ஒரு மாதம் அதை சந்தோச படுத்த பல லட்சம் மக்கள் வரி பணத்தை காலி செய்த கொடுமையும் நடந்துள்ளது.
காட்டில் உள்ள மிருகங்களை பிடித்து வைத்து நாட்டில் இவர்கள் குஷி படுத்துகின்றனராம்.
சமீபத்தில் கூட ஒரு ஆய்வு  கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 யானை பாகன்கள் மதம் பிடித்த யானைகள் தாக்குதலில் இறந்துள்ளனர் என்று கூறுகிறது
காட்டு விலங்குகளை பிடித்து வைத்து சித்திரவதை செய்தால் அது மதம் பிடித்து இப்படி தான் செய்யும் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. கேரளாவில் பிரபல குருவாயூர் கோவிலில் மட்டும்  50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக தகவல் அதை பராமரிக்க கோடான கோடி ரூபாய்கள் செலவு செய்கின்றனர். அதில் ஒரு யானைக்கு மதம் பிடித்து 12 ஆண்டுகள் ஆகியுள்ளதாம் அதை இத்தனை வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டியே வைத்துள்ளனர் என்ன கொடுமை இது......
இது எல்லாம் மிருக வதை இல்லையா...?
இதை தட்டிகேட்க ஒரு அமைப்புகளும் இல்லையா....?
அது எல்லாம் போலியான அமைப்புகளா......?  
உங்கள் ஆன்மீகம்  இப்படித்தான் யானைகளை பிடித்து கட்டி போட்டு சித்திரவதை செய்து ஆசீர்வதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க சொல்கிறதா...? விலங்குகளை பாதுகாக்க இத்தனை சட்டங்கள் இருந்தும் என்ன பயன் அவை எல்லாம் யானைகளுக்கு பொருந்தாதா....?
தேசிய விலங்கு புலி என்பதால் அதை மட்டும் பாதுகாக்க நினைக்கிறதா மத்திய அரசு.
கோவில்களில் ஏன் புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகளை வைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டியது தானே ..... ஏன் அது கடித்து விடும் என்று பயமா....
யானைகள் மட்டும் சாதுவான பிராணி என்பதாலா...?
உங்கள் கடவுள் யானைகள் மூலமாக தான் ஆசீர்வாதம் வழங்குவாரா....?
புலி சிங்கம் போன்ற விலங்குகள் மூலம் வரம் தரமாட்டாரா....
இருக்கிற யானைகளை எல்லாம் கொண்டு போய் காட்டில் விட்டு பாருங்கள் அவைகள் படும் சந்தோசத்தை அப்புறம் பாருங்கள் வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெற்ற  காதல் பாடல்களை காட்டில் பாடி கொண்டு தன் துணையுடன் ஆடி பாடி திரியும்.
இல்லை நாங்கள் பிச்சை தான் எடுக்க வைப்போம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன் வருங்கால சந்ததிகள் வாரணம் ஆயிரம் என்றெல்லாம் சொல்ல யானைகள் இருக்காது படங்களில் மட்டுமே இருக்கும். 

இந்த பதிவை எழுதி முடித்து யானை படத்தை கூகிளில் தேடும் போது இதை பார்க்க நேர்ந்தது நீங்களும் பாருங்கள்  பார்த்து முடித்து பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் யானைகள் இருக்க வேண்டிய இடம் காடா...? இல்லை நாடா.....?

Thursday, August 5, 2010

1...2...3...4...

பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை நம்மை பாடாய் படுத்தி எடுப்பது சாதி
பள்ளி சேர்வதில் தொடங்கி வேலை வாய்ப்பு,
சமூகத்தில் ஏற்ற தாழ்வு,
ஏன் வீடு வாடகைக்கு கேட்டால் கூட சாதி தேவைப்படுகிறது,
இன்றைய அரசியல் கட்சிகள்  சாதிகளை வைத்து தான் அரசியலில் காலம் தள்ளி கொண்டிருக்கிறது.

அத்தனை அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இந்த சாதி உணர்வுகளை கொண்ட கட்சிகளே இதில் திராவிட கட்சிகள் என்று பிதற்றிக்கொள்ளும் இரு கட்சிகள் தொகுதிக்கு தொகுதி ஒவ்வொரு நிலைப்பாடு கொண்டவை
ராமதாசு, திருமா, கிருஷ்ணசாமி, சேதுராமன், பெயர்கள் முழுவதும் சொல்ல இடம் போதாது பெயர் குறிப்பிட்ட இந்த நால்வரில் மூவர் மருத்துவர்கள் அது தான் மிக கொடுமையானது

இவர்கள் முன்னர் மருத்துவம் பார்திருக்கும் போது எந்த நோக்கோடு பார்த்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் மகா கவி.
அடுத்து வந்த தந்தை பெரியார் சொல்லாத கருத்துக்களா அவர் வழி வந்ததாக கூறி கொள்ளும் மஞ்சள் துண்டு தலைவர் பெரியார் சொன்ன வார்தைகளில் ஒன்றை கூட பின்பற்றியதாக தெரியவில்லை
மாறாக சாதி தீயை கொளுந்து விட்டு எறிய செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

சமீபத்தில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் ராஜஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் போல் இங்கேயும் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
ஆக இவர்கள் வன்னியருக்கு மட்டுமே சலுகை பெற்றுத்தர கட்சி நடத்துபவர்கள் இப்படி ஒவ்வொரு சாதியை வைத்து  தனித்தனியே பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சாதித்தது என்ன....?
 மக்கள் அடைந்த பலன் தான் என்ன.......?
ஒரு மயி....ம் இல்லை சரி சாதியை தாண்டி அரசியல் செய்து அனைத்து தரப்பினரையும் முன்னேற்ற ஒரு வழி உள்ளது
இது சாதியை தாண்டி வருபவர்கள்,

சாதியை வேரோடு ஒழிக்க நினைக்கும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்கள்  மட்டுமே ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.
நம் அரசு ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அதை வைத்தே சலுகைகள், இடஒதுக்கீடு என அனைத்தையும் செய்கிறது
அதற்கு பதிலாக, பெயரை நீக்கிவிட்டு 1...2...3...4... என எண்கள் கொடுத்து அதே சலுகைகளை தொடரலாம்.

சமூகத்தில் இந்த சாதி பெயரை சொல்லி திட்டுதல், சாதிக்கொடுமை போன்ற பிரச்சனைகள் இருக்காது சமூக ஏற்ற தாழ்வும் சாதியை வைத்து பார்க்கபடாது காலப்போக்கில் இந்த எண்களே பிரதானமாகி போகும்
பிறகு, அதுவும் காணாமல் போகும். இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை மறுக்க முடியாது

ஆனால் இதை விடுத்து ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் எளிதில் மதம் மாற முடியும் ஆனால் நீங்கள் சாதி மாற முடியுமா.....? சாதி பிரச்சனை தீர ஒரே வழி 1...2...3...4...

Monday, August 2, 2010

காந்தி தேசமே

இந்திய ரூபாய்க்கான சர்வதேச குறியீடு வெளியிடப்பட்டது அது பழைய செய்தியாகி போனது நேற்று மதுரையில் நடைபெற்ற கக்கன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் விரைவில் இந்திய ரூபாய் வடிவம் மாறினாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை காங்கிரஸ் அடிபொடிகள் தங்களது ஆர்வ மிகுதியால் இப்படி இந்திய ரூபாய் வடிவத்தை  மத்திய அமைச்சர், அவரது வாரிசு மற்றும் சோனியா, ராகுல் ஆகியோரது  படத்தை போட்டு கேவலப்படுத்தி உள்ளனர் இந்திய தேசிய கொடியை பயன் படுத்துவதற்க்கு பல விதிமுறைகள் உள்ளது போல் ரூபாய் வடிவத்தை பயன்படுத்த விதிமுறை இல்லையா  மத்திய அரசின் முக்கிய அமைச்சராக இருந்து கொண்டு இதை போன்ற மலிவான விளம்பரங்கள் செய்து மகிழ வேண்டுமா எளிமையாக வாழ்ந்து அரசியல் வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த தியாகி கக்கன் அவர்களை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக இததனை லட்சங்கள் ஆடம்பர செலவு செய்து காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க்க மதுரை முழுவதும் சாலையை மறித்து அலங்கார வளைவுகள், தோரனங்கள் சுவரொட்டிகள் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அவரை கேவலபடுத்துவதாக உள்ளன தேசிய கொடியை அவமதித்திதால் வழக்கு, இந்திய இறையாண்மை பற்றி பேசினால் வழக்கு என்றால் இந்திய ரூபாய் வடிவத்தை தவறாக பயன்படுத்திய மத்திய அமைச்சர் மீது வழக்கு இல்லையா, ஹார்லிக்ஸ் திருட்டு வழக்குக்கே சி.பி.ஐ. விசாரணை கோரும் அம்மையார் இதை ஏன் எதிர்க்கவில்லை ஒரு வேளை கூட்டணி மாறினாலும் மாறும் என்பதற்க்காக விட்டுவிட்டாரா என்ன.....? விழா மேடையில் பேசிய ஒரு தலைவரின் வாரிசு மாணவர்கள் அனைவரும் சத்திய சோதனை புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்ன ஒரு நகைச்சுவை இவர்கள் செய்வதை பார்த்து மக்கள் அமைதியுடன் இருக்கின்றனரே அதே சத்திய சோதனை தான்  காந்தியின் படத்தை  ரூபாய் வடிவத்தில் இருந்து எடுத்து விட்டு தன் படங்களை போட்டு மகிழும் கீழ்த்தர அரசியல் வாதிகள் இவர்கள் எல்லாம் சத்திய சோதனை பற்றி பேசுகிறார்கள் எல்லாம் கால கொடுமை முதலில் உங்கள் கட்சியில் ஒற்றுமையாக இருக்க முயலுங்கள் அப்புறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம். காந்திதேசமே என்று உலக நாடுகள் நம் நாட்டை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்க இவர்கள் காந்தியை மதிக்க கூட வேண்டாம் கேவலப்படுத்தாமல் இருந்தால் சரி.