Tuesday, October 26, 2010

நானே இந்திரன் நானே சந்திரன்

ஈராக் போரின்போது அமெரிக்கா தலைமை யிலான கூட்டுப்படையினரால் 66 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

வளைகுடா போரின் போது ஈராக் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சித்ரவதை குறித்த விவரங்களும் இந்த இணையதளத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மக்களை நிர்வாணமாக்கி அமெரிக்கப் படையினர் கொடுமைப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியான நிலை யில் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஈராக் போர் தொடர்பான 4 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்த உடனேயே அமெரிக்காவும், அதன் அக்கிரமங்களுக்கு துணை நின்ற நாடுகளும் பதறின. இந்தத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைப்பது குறித்து ஆராய பென்டகன் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அமெரிக்காவினால் மறுக்க முடியவில்லை. மாறாக, இந்த ஆவணங்களால் ஈராக் மக்களுக்கும் அந்நாட்டில் உள்ள பன்னாட்டு வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறது அமெரிக்கா.

ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா கூறிய காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை அந்த நாடே ஒத்துக்கொண்டுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கூறிக்கொண்டு அந்நாட்டுக்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மக்களை படு கொலை செய்து, அந்நாட்டின் ஜனாதிபதியையும் தூக்கில் போட்டது அமெரிக்கா. ஆனால் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதம் எதுவும் இல்லை என்று சர்வசாதாரணமாக பிறகு கூறியது அமெரிக்கா.

ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதே அமெரிக்காவின் நோக்கம். அந்த நாட்டு மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு எண்ணெய் வளத்தை இன்றுவரை சுரண் டிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. தங்களது அத்துமீறல்களை நியாயப்படுத்த பொம்மை அரசாங்கம் ஒன்றையும் நிறுவியது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதாக பம்மாத்து வேறு.

ஆனால் ஈராக் மக்கள் அமெரிக்காவின் அராஜகத்தை ஏற்கவில்லை. பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொன்று ஒழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த அடாவடிப் போரில் தனது சொந்த நாட்டு வீரர்களையும் ஈடுபடுத்தி, பலிகொடுத்து, அவர்களது குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நிகழ்த்தியுள்ள படுகொலைகள், சித்ரவதைகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன. ஐ.நா. அனுமதியின் பேரிலேயே ஈராக் மீது போர் தொடுப்பதாக அமெரிக்கா கூறிய நிலையில் உலகில் நானே இந்திரன் நானே சந்திரன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா செய்துள்ள அட்டுழியங்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்குமா.....?

Thursday, October 21, 2010

குறை ஒன்றும் இல்லை

மத்திய அரசு கடை பிடித்து வரும் தாராளமய கொள்கைகளை சிறிதும் பிறழாமல் தமிழகத்தில் செயல் படுத்திவரும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க. அரசு தன்னை தொழிலாளர் வர்க்கம் உயருவதற்கு உறுதுனையாக இருக்கும் ஒரே கட்சி என்று எப்போதுமே பெருமை பேசிக்கொள்ளும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வாரியிறைத்து பெருமை பேசுகிறது தமிழக அரசு. அதே வேளையில் உள்ளூரில் இருக்கும் தொழில் நிறுவனங்களை நசுக்கி வருகிறது அவர்களுக்கு உருப்படியாக மின்சாரம் வழங்க கூட முடியாத அரசு, வெளிநாட்டிலிருந்து தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிருவனங்களுக்கு மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் வழங்க முடிகிறது. ஆக மின்வெட்டு என்பதே ஒரு நாடகம் என்பது அம்பலமாகிறது. அதே வேளையில் இங்கே தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனகள் தொழிலாளர் சட்டங்களை முறை படி கடைபிடிக்க சொல்லி உத்தரவிடுவதில்லை மே தினத்திற்கு தி.மு.க. அரசு தான் விடுமுறை அளித்ததாக கூறி கொள்ளும் தலைவர் ஏன் இதில் மட்டும் முகமூடி அனிந்து கொள்கிறார். அரசின் சாதனைகளான இலவச திட்டங்களை கூறி பெருமை கொள்ளும் நேரத்தில் மின் தட்டுபாட்டை எந்த சாதனையில் சேர்ப்பார். தமிழகத்திற்கு மின் பிரச்சனை தவிர வேறு குறை ஒன்றும் இல்லை என்று முரசொலியில் வேண்டும் என்றால் எழுதலாம்.

Thursday, October 14, 2010

வாரான் வாரான் பூச்சாண்டி

காமன் வெல்த் போட்டி நிறைவு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இலங்கையில் தமிழ் இன படுகொலைகளை நிகழ்த்திய கொடுங்கோலன் ரத்த வெறி ராஜ பக்க்ஷேவை இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. 

உலகில் பெரும்பாலான நாடுகள் போர் குற்றம் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த கருத்தை மாற்ற ராஜ பக்க்ஷேவின் நெருங்கிய கூட்டாளியான காங்கிரஸ் அரசு. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதன் மூலம் அந்த கருத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை அடித்து விரட்டியும் சுட்டு கொன்றும் வருகிறது இலங்கை அரசு அந்த குற்றசாட்டுகளை எல்லாம்  புறந்தள்ளி இப்பொழுது அவருக்கு வரவேற்பது தமிழர்கள் மனதில் வேதனை அளிக்கிறது.

இலங்கையில் கொன்று குவித்து வெறி அடங்காமல் தமிழக மீனவர்களையும் வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு. இதற்கு பல கண்டன குரல்கள் தமிழர்கள் சார்பில் தெரிவித்தும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் நண்பனை வரவேற்பதிலேயே குறியாக உள்ளது இந்திய அரசு. காஷ்மீர் பிரச்சனைகாக எத்தனை முறை அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கும் அதே தமிழக மீனவர்கள் தாக்கபடுவதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்...? காஷ்மீர் மக்கள் மட்டும் தான் இந்தியர்களா....? தமிழன் இல்லையா....? இந்தியவரை படத்தில் தலை பகுதி துண்டாகாமல் பாதுகாக்கும் சோனியா அரசு வால் பகுதியான தமிழ்நாடு போனால் பரவாயில்லை என்று நினைக்கிறதா தமிழகத்தை ஆளும் அரசு கூட தமிழக மீனவர் பிரச்சனையை கண்டு கொள்வதில்லை.

 தொடர்ந்து தமிழர்களை துச்சம் என நினைக்கும் அரசுக்கு அதற்கான பிரதிபலனை தமிழக மக்கள் தருவார்கள் அது நிச்சியம் நடந்தே தீரும் அதில் மாற்றம் இல்லை. காங்கிரஸ் அரசு வேண்டுமானால் ராஜ பக்க்ஷேவை நண்பேன்டா என்று அழைத்தாலும் எங்கள் வீட்டருகில் இருக்கும் குழந்தைகள் கூட வாரான் வாரான் பூச்சாண்டி என்றே பாடுகிறது. அது ஆள்பவர்களின் காதுகளில் விழுமா.....? 

Sunday, October 10, 2010

போனால் போகட்டும் போடா

உணவுத்தட்டுப்பாடு காரணமாக மொசாம்பிக் நாட்டில் நடந்த கலவரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பின்னணியில் எப்ஏஓ கூட்டம் ரோம் நகரில் கடந்த மாதம் கூட்டப்பட்டது. அதில் உலக அளவில் உணவுப்பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய விலை உயர்வு இரண்டு முக்கியக் காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் . ஒன்று, இயற்கைச் சமநிலைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள். அதையும் விட முக்கியமான இன்னொரு காரணம், வர்த்தக உலகின் பங்குச்சந்தை சூதாட்டம் என்று அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைப்பிற்கு உணவு நிலைமைகள் குறித்த ஒரு அறிக்கை இந்தச் சூதாட்டத்தின் பயங்கரத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதிய நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் உணவுச் சந்தையில் (ஊகபேர) நீர்க்குமிழிகள் உருவாகியதால் உணவு தானியங்களின் விலைகள் உயர்ந்தன என்றும், உணவுச் சரக்குகளின் இருப்பும் நிலையற்றதாக மாறியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இணையத் தொடர்பு, வீடுகள் கட்டுமானம், பங்குச் சந்தை போன்ற இதர வளமான துறைகள் வறண்டுபோய்விட்டன. ஒவ்வொரு துறையிலும் நீர்க்குமிழி போன்றிருந்த பொருளாதார நிலைமை வெடிக்க வெடிக்க, இதுவரை உணவுத்துறையில் ஈடுபடாத முதலீட்டாளர்கள், இப்போது இதற்கு மாறுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதலாளித்துவ லாப வேட்டையில், குறிப்பாக இன்றைய உலகமயச் சூறையாடல் சூழலில் மனிதர்களின் உயிர் வாழ்வுக்கு முக்கியமான உணவு தானியங்கள், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகளின் பகடைக்காய்களாக மாற்றப்பட்டிருப்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.

உணவு தானியச் சந்தையில் ஊக பேர சூதாட்டம், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றை அனுமதித்தது, மக்களின் பசியோடு விளையாடவே வழிவகுத்திருக்கிறது என்பதை மத்திய அரசு இனியாவது புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போனால் போகட்டும் போடா என்று இருந்துவிட்டால்  மொசாம்பிக் போன்ற நிலைமைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும். அதைத் தடுத்து நிறுத்துவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். அதற்கேற்ற கொள்கைகளை உடனடியாக வகுக்க வேண்டும்.

Tuesday, October 5, 2010

ஆடுங்கடா என்னை சுத்தி

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தான். கசாபுக்கு, மும்பை தனி நீதிமன்றம் கடந்த மே மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில் அவனுக்கு அருகிலேயே சிறை ஊழியர் ஒருவர் நிறுத்தப்பட்டு உள்ளார், அவனது நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கபட்டு வருகிறது. சிறையில் கசாப் அடிக்கடி வன்முறையில் ஈடுபடுகிறான் என்றும். கடந்த 1ம் தேதி சிறை காவலர்களை கசாப் தாக்கினானென்றும் செய்திகள் வருகின்றது. இது வீடியோ கேமராவிலும் பதிவாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றதை விடியோ ஆதரத்துடன் நிருபிக்கபட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியை மக்கள் வரிபணத்தை வீணடித்து  அவனுக்கு சொகுசாக பாதுகாப்பு அளித்து வேடிக்கை பார்க்கும் நம் நாட்டு சட்டதிட்டத்தை என்னவென்று சொல்வது குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்காமல் விட்டு ஆடுங்கடா என்னை சுத்தி என்று தீவிரவாதிகளை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசுகளை வைத்து கொண்டு என்ன செய்ய...? 

என் பிற தளங்களையும் பார்வையிடுங்களேன்

எல்லாமே தமாசு



சிவந்த கண்கள்  


சிவப்புரோஜாக்கள்

 

 

Monday, October 4, 2010

புத்தன், ஏசு, காந்தி

சாதி அடிப்படை இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தி தான் எல்லா அரசியல் கட்சி காரங்களும் பேசுறாங்க. சாதியற்ற சமுதாயத்தை காணத்தான் இத்தனை காலமாக பெரியார்லருந்து எத்தனையோ தலைவர்கள், சமூக நல ஆர்வலகள்  காலங்காலமா போராடிகிட்டு இருக்காங்க இந்த அரசியல தொழிலா பண்றவுங்க கிட்ட இருந்து சாதியற்ற சமுதாயம் மலர போவது கிடையாது. மதம் மாறுவதற்கு இடம் அளிப்பது போல், சாதி மாறுவதற்கு இடம் அளிக்க வேண்டும். அரசு என்பது சாதி மதங்களை கடந்த்ல்லாவ இருக்க வேண்டும் இவர்கள சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சரி என்று கூறுவது எந்த வகை நியாயம், வறுமையை ஒழிக்கத் தான் இடஒதுக்கீடுன்னு சொல்றாங்க அப்படி பார்த்தா ஏழைகளுக்கு தானே இடஒதுக்கீடு செய்ய வேண்டும். சாதிகளுக்கு இடஒதுக்கீடு எதுக்கு...? வறுமையில் வாடுபவர்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும் இல்லை என்றால் சாதியை வைத்து பல பணக்காரங்க தான் சலுகையை அனுபவிக்கிறார்கள் இந்த நிலை எப்போது தான் மாறுமோ....? புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக என்ற பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்ன செய்ய ஏழைக்கு கிடைக்க வேண்டிய சம உரிமைகள் யார் தருவது...?
http://ellamaethamasu.blogspot.com/2010/10/blog-post_04.html