Monday, November 22, 2010

எல்லோருமே திருடங்க தான்

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், கிரிகெட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்றவற்றால் நாறிப்போயிருக்கும் மத்திய கூட்டணி அரசு போல் கர்நாடகாவில் உள்ள எடியூரப்பா தலைமையிலான பிஜேபி அரசும் பல ஊழலில் சிக்கி நாறி வருகிறது.

ஊழல், முறைகேடுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்பதை பாஜகவினரும் நிரூபித்திருக் கிறார்கள். ஏற்கெனவே குதிரைபேரத்தால் பல கோடி ரூபாய் விலை கொடுத்து மாற்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் எடியூரப்பா அரசுக்கு புதிய தலை வலியாக உருவாகியுள்ளது இந்த நில ஊழல்.

பெங்களூரு மற்றும் மாநிலத்தின் முக்கிய மான நகரங்களில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனது மகனுக்கும் மாநில பிஜேபி தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் மற்றும் தனக்கு வேண்டப்பட்ட சிலருக்கும் விதிமுறைகளை மீறி வாரி வழங்கியுள்ளார். பெங்களூரில் தனது மகனுக்கு சொந்தமாக வீடு இருந்தபோதிலும் அவருக்கு நிலமோ, வீடோ இல்லை என்ற பொய்யான தகவல்கள் அடிப்படையில் பெங்களூரு வளர்ச்சிக் குழுமத்தை ஏமாற்றி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெங்களூருவில் மிகவும் முக்கியமான இடத்தில் அந்த நிலம் அமைந்துள்ளது.

இந்தியாவில் உலகமயம், தாராளமய பொருளா தாரக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர், கடந்த பல ஆண்டுகளாகவே நிலத்தின் மதிப்பு செயற்கையாகவே பல மடங்கு உயர்த்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தை தாரை வார்க்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகளால் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக நிலங்களை வளைத்துள்ளன. இந்தியாவில் கொள்ளை லாபம் கொழிக்கும் தொழில், ரியல்எஸ்டேட் என்பதால் இந்த தொழிலில் பல நிறுவனங்கள் நுழைந்துள்ளன.

ஆட்சி அதிகாரத்தில் அமர ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள், கர்நாடகாவின் முகவரியை மாற்றிக்காட்டுகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிஜேபி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. மற்ற கட்சிகளை விட வித்தியாசமான கட்சி  பிஜேபி என்று அக்கட்சியினர் சொல்வதற்கு இதுதான் அர்த்தம் போல ஆக மொத்தம் எல்லோருமே திருடங்க தான்


Saturday, November 13, 2010

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

முதல்வர் கலைஞர் கருணாநிதி கோபாலபுரத்தில் தான் வசித்து வரும் வீட்டைத் தன் காலத்துக்கும் தன் மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கும் பிறகு பொது மருத்துவமனையாக  ஆக்குவதற்கு நன்கொடையாக அளித்ததை உலக மகா தர்மமாக அவர் கட்சியினரும் துதிபாடிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் உலகத்தில் ஏற்பட்ட கணிணிப் புரட்சியில் பெரும் உந்து சக்தியாக இருந்த மைக்ரோசாஃப்ட்  நிறுவனத்தை உருவாக்கிய அதே பில் கேட்ஸ்தான். இன்று உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்களின் முதல் வரிசைப் பட்டியலில் இருப்பவர்.


 தானும் தன் மனைவி மெலிண்டாவும் உயிரோடு இருக்கும்போதே தங்கள் சொத்தில் பெரும் பகுதியை பொதுக் காரியங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடப் போவதாக பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்

பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர்கள். ஏற்கனவே இதில் 23 மில்லியன் டாலர் சொத்துகளை நன்கொடையாகக் கொடுத்தும் விட்டார் ! பில் கேட்ஸைப் போலவே இன்னொரு பெரும் பணக்கார தொழிலதிபர் வாரன் பஃபெட். இவரது சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்கள். இதில் ஒரே ஒரு சதவிகிதத்தை மட்டுமே தனக்கென்று வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்த பஃபெட், மீதி 99 சதவிகிதமும் தான் இறப்பதற்கு முன்னால்  நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கப் பணக்காரர் ஜார்ஜ் லூக்காஸ். இவருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் சினிமாகாரர்கள். ஸ்டார் வார்ஸ் படங்களை உருவாக்கியவர் லூக்காஸ். இவர் தன் மூன்று பில்லியன் டாலர் சொத்தில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்குத் தான் வாழும்போதே கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.

பில் கேட்ஸும் வாரன் பஃபெட்டும் தங்கள் சொத்துகளை தானம் செய்வதோடு நிற்கவில்லை. அமெரிக்காவில் இருக்கும் இதர பெரும் பணக்காரர்களை அழைத்து நீங்களும் சம்பாதித்ததை இந்த சமூகத்துக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள்.  “ தருவதாகவாக்குறுதி அளித்தல்” ( கிவிங் ப்ளெட்ஜ்) என்ற இந்த இயக்கத்தில் இணைய, இதுவரை 40 பெரும் பணக்காரர்கள்  முன்வந்திருக்கிறார்கள்.

பதினெட்டு பில்லியன் டாலர் சொத்துள்ள புளூம்பர்க், 11 பில்லியன் சொத்துக்காரர் ரொனால்ட் பெரெல்மன், உலகத்தின் ஆறாவது பெரும் பணக்காரரும் 28 பில்லியன் டாலர் சொத்துக்காரருமான லாரி எல்லிசன் ஆகியோர் முன்வந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அமைப்புகளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் நன்கொடை கொடுப்பதற்கு பதில், உடனடியாக பெரிய திட்டங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகைகளை இப்போதே கொடுத்து விரைவில் நல்ல விளைவுகளும் மாற்றமும் ஏற்படச் செய்யவேண்டும் என்பது பில் கேட்ஸின் கொள்கை. இப்போதே ஆப்ரிக்காவில் கொசு எதிர்ப்பு மருந்து பூசிய கொசு வலைகளைப் பெருமளவு விநியோகித்து மலேரியா ஏற்படுவதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

இதே போல பிரிட்டனிலும் தொழிலதிபர்கள் நன்கொடை வாக்குறுதி இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். ஆல்பர்ட் குபே என்பவர் சூப்பர் மார்க்கெட்கள் அதிபர். சொத்து மதிப்பு 480 மில்லியன் பவுண்டுகள்.. இதில் வெறும் 10 மில்லியன் பவுண்டை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டு மீதியை தரப்போவதாக அறிவித்துவிட்டார். சைன்ஸ்பரி பிரபு என்பவர்  ஏற்கனவே 275 மில்லியன் பவுண்டுகளை தானம் வழங்கியிருக்கிறார்.

சாதாரண மனிதர்களாகத் தொடங்கினோம். இந்த சமூகம் இதுவரை நமக்குக்  கொடுத்தது. இனி நாம் நம் தேவைக்கு போக மீதியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது இவர்கள் பார்வை.

இப்படி எல்லாம் உலக பணக்காரர்களின் மனநிலை இப்படி இருக்க இங்கே ஒரு வீட்டை தானமாக அதுவும் தன் குடும்ப உறுப்பினர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்டு அதை உலகம் முழுக்க தம்பட்டம் அடித்து கொண்டு திரியும் மனிதர்களை என்ன வென்று சொல்வது .....? அதை விட கொடுமை கழக கண்மணிகள் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று பாடல் பாடி ஊர் முழுக்க திரிவது வெட்க்ககேடு

Monday, November 8, 2010

கண் மூடி திறக்கும் போதே

ஐரம் சானு சர்மிளா கடந்த பத்து வருடங்களாக உண்ணாவிரதம், உலகில் யாரும் இது போல இருந்திருக்க முடியாது, இருக்கவும் முடியாது, தற்கொலை முயற்சி வழக்கு போட்டு மூக்கு வழியே திரவ உணவை செலுத்துகிறது காவல் துறை மணிப்பூர் மாநிலத்தில், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள "ஆயுதப்படை சிறப்புச் சட்ட'த்தை திரும்பப்பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்

இந்தியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்கா நாட்டு அதிபர் ஒபாமா காந்தி வாழ்ந்த நாடு என்று புகழ்ந்து கொண்டிருக்க ஆனால் இங்கோ அவர் அவர் வழியில் சத்தியாகிரகம் நடத்தி கொண்டிருக்கும் சகோதரி சர்மிளாவைத்தான் கண்டுகொள்ள ஆளில்லை.

மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை, ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. இதில் ஒருவர் கர்ப்பிணி பெண் ஆவார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.

கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்களும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்களையும் ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' வழங்கப்பட்டது

இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி, எங்கு, எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அங்கு மனிதஉரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ராணுவத்தினரால், அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த ஆயுதபடை சிறப்பு சட்டமானது காங்கிரஸ் போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்களால் சுதந்திரத்திற்கு முன்பு உருவக்கப்பட்டது ஆனால்  வேறு ஒரு வடிவில் இன்றும் தொடர்வது வேதனையானது இந்த சட்டத்தை எதிர்த்துதான் காஷ்மீரிலும் கலவரம் நடைபெற்றது. தீவிரவாதிகளை ஒடுக்குவதை விடவும் அதன் பின்னனியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயன்றால் தான் இதற்கு ஒரு வழி கிடைக்கும் இதெல்லாம் கண் மூடி திறக்கும் போதே முடிந்து விடாது என்பது அனைவருக்கும் தெரியும், திடமான முடிவுகள் எடுக்கும் அரசுகள் வரும் வரை எத்தனை  சர்மிளாக்கள் உண்ணா நோன்பு இருந்தாலும் அர்த்தமற்றதே 

Thursday, November 4, 2010

நீயின்றி நானும் இல்லை

சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில் நோக்கியா செல்போன் நிறுவனத்தில் அம்பிகா (வயது 23) முதல் ஸ்டேஜ் பிரிவில் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்துள்ளார். எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய டெக்னீஷியன்களை அழைத்துள்ளார். அவர்கள் வராததால், எந்திரத்திற்குள் தலையை விட்டு சரி செய்ய முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் இயங்க ஆரம்பித்தது. அதனால் எந்திரத்திற்குள் அவர் கழுத்து மாட்டிக் கொண்டு நசுங்கியது.

இதை பார்த்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து எந்திரத்தை நிறுத்துமாறு டெக்னீஷியன்களிடம் கூறியிருக்கின்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு எந்திரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் கையில் டூல்ஸ் இல்லாததால் எந்திரத்தை பிரித்து உடனடியாக அம்பிகாவை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த எந்திரத்தை உடைத்து அம்பிகாவை மீட்க ஊழியர்கள் முயற்சித்தனர் விலை உயர்ந்த எந்திரத்தை உடைக்கக் கூடாது என்று அவர்களை நிர்வாகத்தினர் தடுத்து விட்டனர். இதன் பின்னர் எந்திரத்தை பிரித்து 30 நிமிடங்கள் கழித்து அம்பிகாவை வெளியே எடுத்தபோது அவர் இறந்துகிடந்தார்.

 தனது தவறுகளை மூடி மறைக்க கம்பெனிக்கு நிர்வாகம் விடுமுறை அளித்ததோடு, அந்த எந்திரத்தையே அங்கிருந்து அகற்றிவிட்டது. பின்னர் அம்பிகாவின் உடலை நுங்கம்பாக்கம் அப்போலோ மருத்துவ மனைக்கு உடலை கொண்டு சென்றனர். அதுவரை இந்த விபத்து குறித்து புகார் எதுவும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை.

அம்பிகா, 58ஆண்டுகாலம் பணியாற்றினால் எவ்வளவு ஊதியம் பெறுவாரோ அந்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். காப்பீட்டு தொகை மற்றும் பணிக்கொடையை வழங்க வேண்டும். அதுவரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாது என்று கூறி ஊழியர்கள், உறவினர்கள் பிணவறை முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். இது குறித்து 8ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது

இதேபோல் பி.ஒய்.டி. என்ற எலக்ட்ரானிக்ஸ், ஹுண்டாய், ஃபோர்டு, லூமாக்ஸ், ஹவாசின், சான்மினா போன்ற ஏராளமான நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொழிற்சாலை ஆய்வாளர்கள், தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிற்சங்க அங்கீகாரச்சட்டம் அவசியம். இல்லை என்றால் இது போல பல அம்பிகாக்கள் இறந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்ள போவதில்லை. 

சமீபத்தில் கூட முதல்வர் ஒரு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நீயின்றி நானும் இல்லை என்று தொழிலாளர் வர்கத்தினருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவர் துயர் துடைக்க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் ஆளாக நான் நிற்பேன் என்று கூறினார் இந்த துயர சம்பவத்திற்கு என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.  

Monday, November 1, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

குழந்தைகளை படிக்க அரசு பள்ளிகளுக்கு அனுப்பினால் அங்கே கல்வி மட்டும் கற்று தருவதில்லை, கழிவு நீர் அகற்றவும்  சொல்லுகின்றனர் இந்த கொடுமை எல்லாம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வள்ளிப்பஜரம் கிராமத்தில் உள்ள அரசினர் நடு நிலைபள்ளியில் தான் நடக்கிறது. 

பள்ளியில் உள்ள கழிவறை நிரம்பிவிட்டால் பள்ளியில் படிக்கும் மானவிகளை வைத்தே சுத்தம் செய்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை எதிர்த்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இங்கே பள்ளி குழந்தைகளுக்கே இந்த நிலைமையை என்னவென்று சொல்வது, புகைபடத்தோடு செய்திகள் வெளிவந்தும் பள்ளி கல்வி துறை எந்த விசரணையும் நடத்தாமல் தூங்கி வழிகிறது.


சரி, அரசு பள்ளிகளில் தான் இத்தனை கொடுமைகள் என்றால் தனியார் பள்ளிகளும் தங்கள் பங்கிற்க்கு கொடுமைகளை அறங்கேற்றி வருகிறது. மாணவர்களை அடிப்பது, திட்டுவது  உடல் ரீதியாக துன்புறுத்துவது குற்றம் என்று எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்த தனியார் பள்ளிகள் அதை கண்டு கொள்வதில்லை கோவை நகரில் அர்.எஸ். புரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை மிக கொடுரமான முறையில் வழங்கபட்டு வருகிறது 


சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகளுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனை தான் "எறும்புக்கடி!' சொல்படி கேட்காத சிறு குழந்தைகளை, இங்குள்ள ஒரு சிறு மரத்தில், கயிற்றால் கட்டிப் போட்டு விடுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிவப்பு எறும்புகளின் கடி தாங்காமல் குழந்தைகள், கால்களை மாற்றி, மாற்றி வதைபட்டு கதறுவதை பார்க்கும் பிற குழந்தைகள், மனதளவில் மிரண்டு விடுகின்றனர். மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது. 


பெற்றோரிடம் சொன்னால், "டிசி' கொடுத்து அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலால் மிரண்டு போகும் குழந்தைகள், இதுகுறித்து பெற்றோரிடம் மூச்சு விடுவதில்லை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களோ இது போன்ற புகார்கள் குறித்து கண்டு கொள்வதில்லை எங்கே செல்லும் இந்த பாதை என்று பார்த்து கொண்டிருக்காமல் அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு