Monday, January 24, 2011

விடிகின்ற பொழுது

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் இலவச டி.வி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற்றுள்ளது. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்துவிட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல. வர்லாற்றில் இடம் பெற வேண்டிய கடிதம்.
”மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.
ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”
விஜயகுமாரின் கடிதம் கடிதம் அல்ல. செருப்பு. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த செருப்படி. விஜயகுமார் போல ஒவ்வொரு தமிழனும் சிந்தித்தால் தமிழகம் கொடுங்கோல், கலிக்கூத்தான இருண்ட ஆட்சியிலிருந்து விடிகின்ற பொழுது விரைவில் வரும் என்பது சந்தேகமில்லை

Thursday, January 13, 2011

தகிடு தத்தம்

இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியோடு அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வண்டிகளுக்கு அழைப்புகள் திருப்பிவிடப்படு கின்றன. விபத்துகள் மட்டுமின்றி, பெண்களைச் சீண்டுதல் ஆகியவை பற்றியும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த வசதி துவக்கப்பட்டது. இந்த சேவையைத் துவக்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகமாகும். 108 அழைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண் டும் கட்டணமில்லாமல் மக்களுக்குக் கிடைத்தது. உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை கூடுதல் கவனத்தோடு பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் மேலும் கூர்மையோடு கவனித்தபோதுதான் இந்த விளம் பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள்ளார்கள் என்பது தெரிந்தது.

சென்னையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைக் கேட்டார். மக்களுக்கு வசதி செய்து தரும் இந்த சேவைக்காக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் இலவசமாக சேவை செய்கிறார்களோ என்று நினைத்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் அவருக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பரத்திற்காக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அரசால் தரப்பட்டுள்ளது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்க மிட்டவர்கள், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று மாறியுள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும் திட்டங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரசு கஜானாவிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். பத்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம் புலன்ஸ் விரைகிறதாகக் காட்டப்படும் விளம்பரங்களை ஒருமுறை ஒளிபரப்ப சன் டி.வி. 23 ஆயிரத்து 474 ரூபாயும், கலைஞர் டி.வி. 9 ஆயிரத்து 700 ரூபாயும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு வசதி என்றபோதிலும், மருத்து வத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாகவே புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த 108 சேவை என்பது மோசடி மன்னன் சத்யம் ராமலிங்க ராஜூவின் மூளையில் உதித்ததாகும். மாநில அரசுகளிடமிருந்து பணத்தைக் கறக்கவே இந்தத்திட்டம் கொண்டு வரப்பட்டது. .

மக்கள் பணத்தையே எடுத்து தனியார் நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்ப நிறு வனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, இலவச சேவை என்று மக்களின் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல், சட்டினியே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன-தாராளமயம் பல ஒப்பனைகளோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பனை கலைந் துள்ளது. அதன் கோர வடிவம் அம்பலமாகியுள்ளது. கலைஞர் ஆட்சியின் தகிடு தத்தம் வேலைகளில் இதுவும் ஒன்று இன்னும் எத்தனையோ