Monday, January 4, 2016

ஏறு தழுவல்

இந்த ஆண்டு சல்லிக்கட்டு தடையை நீட்டிக்கும் பட்சத்தில் அதற்கு காரணமான 2 திராவிட கட்சிகளையும் 2 தேசிய கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

Saturday, June 21, 2014

இருக்கிற பிரச்சனையில இவிங்க வேற



100 ஆண்டுக்கு மேல் வரலாறுகள் கொண்ட திரைப்பட துறை பல கலைஞர்களையும், பல படைப்பாளிகளையும் எண்ணற்ற மனிதர்களை உலகுக்கு காட்டியுள்ளது உலகின் பல நாட்டு அரசியலை கூட தலை கீழாக்கியது என்று சொன்னால் மிகையாகாது.

திரைபடங்கள் இல்லாத நாடே இல்லை என்ற நிலைக்கு கிட்டதட்ட இந்த உலகமே வந்துவிட்டது.  பல துறைகளை கொண்டு நவீன தொழில் நுட்பங்களால் புதிய கண்டுபுடிப்புகளால் தன்னை புதுபித்து கொண்டே வந்துள்ளது. மனிதன் காணாத புது புது உலகத்திற்கும், மனிதனின் அதீத கற்பனைக்கு வடிவம் தந்து ஒருவரின் சிந்தனையை உலகமே பார்க்க  செய்வதென்பது சினிமாவால் மட்டுமே சாத்தியம்.

எத்தனை கோடி தொழிலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள்,
இசை கலைஞர்களின் உழைப்பு மற்றும் அற்பணிப்பு தான்
இந்த திரைப்படத்துறை.
கற்பனை குதிரையை தட்டி விட்டு 
அதை படமாக்கி உலகுக்கு காட்டும் வரை 
எத்தனை பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகிறார்கள் அவர்கள் ஒரு புறம் இருக்க, 
 அதை காண முந்தி அடித்து சென்று ஆர்வத்துடன் காண்பவர்கள் ஒரு புறம். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
ஊரறிந்த தகவலுக்கு விளக்கம் எதற்கு............?

குப்பைகளை கோபுறமாக்குவதும், 
கோபுரங்களை குப்பைகளாக்குவதும் 
இங்கே சில நொடி பொழுதுகளில் நிகழும்.

பயன் அடைந்தவர் பலர், 
பணம் இழந்தவர் பலர். 

எண்ணற்ற பாரம்பரிய கலைகளை நசுக்கியதும், 
பல அரிய கலைகளை மீட்டெடுத்ததும் இதே துறை தான். 
ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் புரளும் துறைகளில் இதுவும் ஒன்று.

இந்திய திரைப்படதுறையில் பல மொழிகள் முக்கிய பங்களிக்க
குறிப்பாக அதில் நமது தமிழ் திரைப்படங்கள், மற்றும் அதன் நடிகர்கள் படைப்பாளிகளின் பங்கு அளப்பறியது.
திரைப்படத்தை பார்த்து ஏமாந்து நாட்டின் முதல்வர் ஆக்கிய வரலாறுகள் இங்கே மிகவும் முக்கியமானது.

அரசியலை நோக்கிய படையெடுப்பு
திரைதுறையில் இருந்தே நெடுங்காலமாக தொடங்கபடுகிறது
அது இன்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இனிமேலும் கூட இருக்கும்.

அரசியலில் சினிமா தனமும், 
சினிமாவில் அரசியலும் கலந்தே தான் நமக்கு காண கிடைக்கிறது.

நாட்டில் விலைவாசி உயர்வு ஒரு புறம்,
பண வீக்கம் ஒரு புறம்
இன்னும் சொல்ல போனால்
ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் சாகும் பல லட்சம் பேர்
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்க

அது எல்லாம் கண்ணுக்கு தெரியாமல்,
நகை கடை விளம்பரத்தில் நடித்து கொண்டும்,
கோடிகளில் சம்பளம் பெற்று கொண்டும்,
வரி ஏய்ப்புகள் செய்து கொண்டும்,
பல தயாரிப்பாளர்களை நடு தெருவிற்கு கொண்டு வந்தும்
இன்னும் சொல்ல போனால்
தனது திரைப்படம் லாபம் ஈட்டுகிறதோ இல்லையோ
அதை கூட தெரிந்து கொள்ளாமல்
மேலும் மேலும் தனது சம்பளத்தி உயர்த்தி கொண்டே சென்று விட்டு

திரைப்பட துறையை அழிவில் இருந்து மீட்க
வரி விலக்கு கேட்கும் அறிவாளி நடிகர்களே ..........

இன்னும் உங்கள் சம்பளத்தை ஏற்றி கொண்டே போங்கள்.
இழைத்தவன் ரசிகன் இருக்க 
நீங்கள் மோடிக்கும் கடிதம் எழுவீர்கள், 
ஓபாமவுக்கும் கடிதம் எழுதுவீர்கள்.

நீரின்றி வாடும் ஏழை விவசாயிக்கு தண்ணீர் கேட்டு
கடிதம் எழுதியது உண்டா ........... ?
எங்கேயாவது பேசியதாவது உண்டா ........ ?
அப்படி பேசினால் அங்கே உங்கள் படம் ஓடாது என்ற பயம்
இது தான் உங்கள் வீரம் என்பது இங்கே இருக்கும் இழைத்தவன்
ரசிகனுக்கு தெரியாது அவனுக்கு அது தெரிய ஆரம்பித்தால்
குடிக்க தண்ணீர் தேடி நீங்கள் தான் அலைய வேண்டி வரும்.

மூழ்கும் ஓடத்தில் மேலும் மேலும் பாரத்தை ஏற்றி கொண்டே காப்பாற்றுங்கள் ................... காப்பாற்றுங்கள் 
என்று அலறுவது நகைப்பிற்குரியதே தவிர 
வேறு என்ன சொல்ல ................. ????

சம்பளங்களையும் ஆடம்பரங்களையும் கொஞ்சம் குறைத்தால் 
வாழுமே உன் உலகம். 

உழைத்து களைத்து வரி கட்டும் ஏழைகளுக்கு சலுகை தரலாம்
உன் போன்ற கழிசடைகள் கோடிகளில் புரண்டு கொண்டு
அழிவை நோக்கி தள்ளிய துறைக்கு எதற்கு வரி விலக்கு
முடிந்தால் உங்கள் சம்பளத்தை வெள்ளைகளாக வாங்குங்கள்,
முறையாக வருமானவரி கட்டுங்கள்.

சம்பளத்தை லட்சங்களில் பெறுங்களேன் ............!!!
கொடி கட்டி பறந்து தழைத்தோங்குமே உன் திரைப்பட உலகம்.

இல்லாதவருக்கு அள்ளி கொடுக்க வேண்டாம் ............
கிள்ளி கொடு

இன்னும் தொடரும். - ஆயிரத்தில் ஒருவன்




Saturday, June 7, 2014

பியூஷ் மனுஷ்




பியூஷ் மனுஷ்

ராஜாஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர், ஆனால் தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாமே சேலத்தில்தான்.
முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் கல்வி காசாக்கப்படுவதை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர் படித்த கல்லூரி நிர்வாகம் இவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
அதன் பிறகு சேலம் மண்ணையும்,மக்களையும் பற்றி படிக்க ஆரம்பித்தார்.
குடிக்க தண்ணீர் இல்லை என்று புலம்பும் சேலம் மக்களின் கண்ணீருக்கு காரணம்தான் என்ன? என்பதை அறிய முற்பட்டார்.
அப்போதுதான் மழைக்காலத்தில் ஒன்று நிரம்பினால் இன்னொறுக்கு என்று சங்கிலித்தொடர் போல நீர் நிரம்பிகாணப்பட்டதும்,சேலத்தின் நீர்வளத்தை பாதுகாத்து வந்ததுமான முப்பதிற்கும் மேற்பட்ட ஏரிகள் தனியாரால் வாங்கப்பட்டும்,வளைக்கப்பட்டும் நாசமானது தெரியவந்தது.
இப்போது அந்த ஏரிகள் இருந்த இடமெல்லாம் தூர்ந்து போய் பாலைவனமாகி விட்டது. கிரானைட் மற்றும் பாக்சைட் நிறுவனங்களின் கழிவுகள் கொட்டிவைக்கப்படும் ரசாயன தொட்டியாகிவிட்டது.

10 ஆண்டு போராட்டம்:

இப்படி இழந்த குடிநீர் ஆதாரங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து சேலம் மக்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த பத்து வருடங்களாக போராடிவருகிறார்.மூங்கில் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்துவரும் இவர் இதற்காக செலவு செய்யும் நேரத்தை விட சேலம் மக்கள் குழுவிற்காக செலவிடும் நேரமே அதிகம்.
போராட்டம் மட்டுமே தீர்வாகாது ஒரு ஏரியின் அருமையை இந்த சேலத்தின் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்பர்களுக்கும் உணர்த்தவேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போதுதான் படு மோசமான நிலையில் இருந்த மூக்கனேரியை பாரமரிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.சேலம் மக்கள் குழுவின் சார்பாக நிதி திரட்டி இந்த ஏரியிலேயே இரவு பகலாக தனது நேரத்தை செலவழித்தார்.
முதலில் பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து ஏரியின் பெருமைகளை சொல்லி தூர் வார வைத்தார், ஏரிக்கு நடுவே 48 திட்டுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு திட்டிலும் 300 மரங்களை நட்டார்.


பறவைகள் சரணாலயம்:

சில மாதங்கள் சென்ற பிறகு திட்டுக்களில் மரங்கள் வளர்ந்து பலன்கள் தந்தது,வளர்ந்த மரங்களுக்கு பறவைகள் வந்து தங்கியது, இப்போது மூக்கனேரி சோலைவனமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் மாறி நிற்கிறது.கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளோடு சேலம் குடும்பத்தினர் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்.எல்லாவற்றுக்கும் மேலாக ஏரியில் தேக்கப்பட்ட நீரால் இந்த பகுதியின் நீர் மட்டம் உயர்ந்து இந்த பகுதியில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதன் பிறகுதான் ஏரியின் அருமையை அனைவருமே உணர ஆரம்பித்தனர்.
இப்போது இந்த பகுதி மக்கள் ஏரியில் யாரையும் குப்பை கொட்டவிடுவது இல்லை,பிளாஸ்டிக் ,பழைய துணிகள் போன்ற கழிவுகளை விட்டெறிவது இல்லை,ஏரியை புனிதமாக கருதி கரையோரங்களில் நான்தான் மாரி (தெய்வம்) என்னை மதியுங்கள், நான் உங்களை மதிப்பேன் என்று எழுதிவைத்து ஏரியை மாரியாக வழிபட்டு வருகின்றனர்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் மூக்கனேரி சேலத்தின் பெருமைமிக்க இடங்களில் ஒன்றாக திகழப்போவது உறுதி.
இதற்கு பிறகு மாவட்ட நிர்வாகமே சேலம் மக்கள் குழுவை அழைத்து சுகாதார சீர்கேட்டின் மொத்த உருவமாய் காணப்பட்ட அம்மாபேட்டை ஏரியையும்,இஸ்மாயில்கான் ஏரியையும் சுத்தம் செய்து மூக்கனேரி ஏரி போல மாற்றித்தர கேட்டுக்கொண்டுள்ளது.


நல்லது செய்ய முயன்றால்:

சமூகத்திற்கு நல்லது செய்யப்போனால் எத்தனை போட்டி பொறாமை எதிர்ப்புகள் வசவுகள் வரும் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்கின்றேன், ஆனாலும் என்னையும், என் குடும்பத்தாரையும் வாழவைக்கும் சேலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன்.
வெறுமனே சேட்டு வீட்டு பிள்ளையாக இருந்து வியாபாரத்தில் வரும் லாபம் நட்டத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பதில் எனக்கு மனமும் இல்லை விருப்பமும் இல்லை.
தண்ணீரை மையப்படுத்தி மூன்றாம் உலகப்போர் வருவதற்கு முன்பாக நம்நாட்டில் உள்நாட்டு போரே வந்துவிடும் அபாயம் உள்ளது,இதை உணர்ந்து நீர் நிலைகளை மதித்தால் நீர்நிலைகள் நம்மை மதிக்கும், அதற்கு உதாரணம்தான் மூக்கனேரி.

சேலம் மக்கள் குழுவில் நான் ஒரு சாதாரணமானவன்தான் ஏரியை சுத்தப்படுத்த முதலில் தரப்படும் பணம் என் பணம்தான், ஏரியை சுத்தப்படுத்த முதலில் சேறு வார இறங்கும் கால்கள் என்னுடைய கால்கள்தான், ஏரியை வலுப்படுத்த முதலில் கல் சுமப்பது என் கைகள்தான்.
மூக்கனேரி, அம்மாபேட்டை ஏரி, இஸ்மாயில்கான் ஏரி போல நம்நாட்டில் ஆயிரமாயிரம் ஏரிகள் இருக்கின்றன இந்த ஏரிகளை காப்பாற்றுவதுதான் நாம் நமது அடுத்த தலைமுறைக்கு தரும் நிஜமான செல்வம் நீர் நிலைகள்தான். ஆகவே கொஞ்சம் முயன்றால் என்னைவிட சிறப்பாக செயல்பட உங்களாலும் முடியும், உங்கள் ஊர் ஏரிகளை சிறப்பான நிலைக்கு கொண்டு வர முடியும்,தேவை எல்லாம் கொஞ்சம் முயற்சியே,உங்கள் முயற்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எப்போதும் தயராக இருக்கிறேன் என்று சொல்லும் பியுஷ் மனுஷ்டன் தொடர்பு கொள்ள: 9443248582.


இது தினமலர் செய்தி ஆயினும் இன்னும் பலரை சென்றடைய இங்கே இந்த பதிவு

தமிழ், தமிழர் என பேசும் எத்தனை அரசியல் கட்சிகள் இது போல இறங்கி சேவை செய்ய தயாராக உள்ளனர்.
மக்களும் அரசியல் வியாதிகளையே குற்றம் சொல்லி பழகி விட்டனர். நமக்கான தேவைகளை நாமே தீர்த்து கொள்ள நம்மில் எத்தனை பேர் முனைந்திருக்கிறோம்,  நாம் நமது அடுத்த தலைமுறைக்கு தரும்
நிஜமான செல்வம் நீர் நிலைகள்தான்.  அதை பாதுகாக்க இதை செய்து காட்டி இன்று பலரின் பாராட்டையும் பெற்று பலரையும் இதில் ஈடு படுத்தி இது தான் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க  சரியான வழி என்று சொல்லும்
பியூஷ் மனுஷ் உண்மையில் ஒரு மாமனிதர் தான்.
பியூஷ் மனுஷுக்கு என் நன்றிகள்.

Tuesday, August 13, 2013

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது

(தலீவர்)
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது

(தலீவர்)
முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது

அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது

(தலீவர்)
ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது

குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது

(தலீவர்)
வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், மக்களை மறந்தேன்
காங். பின் சென்றேன் மக்கள் நம்பிக்கையை இழந்தேன்
இனி கட்சியையும் இழப்பேன்
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது

 https://www.facebook.com/duklakdurbar

Sunday, July 28, 2013

சோதனை மேல் சோதனை


எனக்கு அஞ்சு மணிக்கு மேல 2 கண்ணும் தெரியாது....!

oh... my god ...... i am very sorry. நீ ... இங்கேயே உட்காரு.

சாரி ... சார் என்னால உட்கார முடியாது.

ஏன்...?

எனக்கு மூலம். உள் மூலம், வெளி மூலம்.

உன் பேரு என்னப்பா .....?

ஆதிமூலம்.

கரெக்டா தான் வச்சிருக்குற. கையை குடு பல்ஸாவது பாக்குறேன்.

சாரி சார். என்னால கையெல்லாம் குடுக்க முடியாது நீங்களே புடிச்சி பாத்துக்கங்க.

அது ஏன்.....?

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பக்கவாதம் வந்ததுல என் ரெண்டு கையும் விழுந்து போச்சு.

பக்க வாதம் இல்லப்பா ..... பக்கா வாதம். பாவமா இருக்குறியே ஒரு டீ யாவது சாப்பிடு.

ஐயையோ .... நான் டீ, காபி எல்லாம் சாப்பிடுறதில்ல.

ஏன்.... பழக்கமில்லியா.....?

இல்ல சார் எனக்கு சக்கரை வியாதி.

சுகரா.......!

இது எத்தனை நாளா.....?

ரத்தக்கொதிப்பு வந்தப்போ, அதுவும் சேர்ந்து வந்திடுச்சு.

ரத்தக்கொதிப்பு வேற இருக்கா .....?

டி.பி. வந்தப்போ ..... அதுவும் Joint ஆயிடுச்சு.

இந்த இடம் சரியில்லை, வா நடந்துக்கிட்டே பேசுவோம்.

சாரி, சார் என்னால ரொம்ப தூரம் நடக்க முடியாது.

ஏன்.......?

கால்ல ஆணி சார்.

அடப்பாவி.

ஒரு உடம்புக்குள்ள ஒரு கோடி வியாதியா ...... ?

சார் நீங்க எதோ பேசுறீங்கன்னு தெரியுது எது பேசுனாலும் இந்த பக்கம் வந்து பேசுங்க ....

ஏண்டா....?

மஞ்சகாமாலை வந்ததிலிருந்து இந்த பக்க காது கேக்குறதே இல்ல.

இந்த லட்சணத்துல போனா மருத்துவர் குழு நிலைமை மற்றும் நீதிமன்ற விசாரணை என்ன ஆகும்னு உங்க கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

https://www.facebook.com/duklakdurbar

 துக்ளக் தர்பார்

Saturday, November 10, 2012

ஒரு பண்பாடு இல்லை என்றால்




தமிழ்நாட்டில் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவும் இந்த வேளையில், மத்திய அரசு உதவ வேண்டும் என்று பலமுறை தமிழக முதலமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் மேல் கடிதம் எழுதியும்  ஒரு கடிதத்திற்கு கூட மத்திய அரசிடமிருந்து பதில் வந்ததில்லை. கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரத்தை கூட அளிக்க மறுத்து வருகிறது.

கடந்த வாரம் கூட முதலமைச்சர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தில்லி மாநில அரசு மத்திய மின் தொகுப்பிடம் திருப்பி அளிக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தையாவது தமிழ் நாட்டிற்கு ஒதுக்கவேண்டும் என்று கோரியுள்ளார். தங்களிடம் மிகை மின்சாரம் இல்லை என்று வழக்கம்போல் இந்தக் கோரிக்கையும் மத்திய அரசு ஏற்கவில்லை.

ஏற்கனவே பல கடிதங்களை எழுதிய பின்னர் மத்திய அரசு ஒதுக்கிய 100 மெகாவாட் மின் சாரத்தில் மாநிலத்திற்குக் கிடைப்பது என்னவோ வெறும் 78 மெகாவாட் மின்சாரம் தான். தென்மேற்குபருவமழை தவறியதாலும் தென் மண்டல மின்தொகுப்பின் பாதைச் சிக்கல்களா லும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழ்நாடு வாங்கமுடியாத நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். போது மான மின்சாரம் விநியோகம் இல்லாத காரணத் தால் மாநிலத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியே கேள்விக் குறியாக உள்ளது. எனவே மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் உதவியில்லாமல் மாநில அரசால் செயல்பட முடியாது.

கடந்த ஓர் ஆண்டாகவே தமிழ் நாட்டில் மின்சாரத்தை நம்பி தொழில் புரிபவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது, இந்த மின்பற்றாக்குறையை தமிழ் நாட்டின் பேரிடராக அறிவித்தால் கூட நல்லது தான். மழை, புயல், வெள்ளத்தால் வந்தால் மட்டும் தான் பாதிப்பா…?

மின் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்புகள் கூட பாதிப்பு தான்.
தொடர்ந்து தமிழ்நாட்டை பல வழிகளில் புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை பல ஐயபாடுகளை கொண்டுள்ளது.
தண்ணீர் கேட்டு கேரளா, கர்நாடகம், ஆந்திரா, ஆகிய மூன்று மாநில கதவுகளை தட்டுகிறோம் எந்த மாநில அரசும் காது கொடுத்து கேட்க கூட மறுக்கிறது,
உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் கூட கரநாடக அரசு கேட்க மறுக்கிறது.
மத்திய அரசோ, வாய் மூடி, மௌனியாகவே இருக்கிறது.
எதிர் கட்சி ஆட்சியில் இருக்கிது என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து தமிழ் நட்டை மத்திய அரசு புறக்கணிக்கிறது

எத்தனை மாநிலங்கள், எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், இவை எல்லாம் ஒன்றடக்கியது தான் இந்தியா.
பிற நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி ஓடி சென்று உதவும் நாடு என்ற பேர் கொண்ட இந்திய நாட்டில் வாழும் ஒரு பகுதியினருக்கு 
மின்சாரம் இல்லை,  
தண்ணீர் இல்லை,   
சகோதரர்களாக பாவிக்க மறுக்கும் மனப்பான்மை உடையவர்களிடம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் நட்பு,
எங்கள் நாட்டில் உறபத்தியாகும்   
மின்சாரம்,  
உணவு பொருட்கள்,  
வரி மட்டும் உங்களுக்கு வேண்டும்  
அங்கே உபரியாக இருக்கும் தண்ணீரோ  
மின்சாரமோ எங்களுக்கு கிடையாதென்றால்  
வேண்டாம் எங்களுக்கு இந்தியா.
பண்பாடோடு நாங்கள் மட்டும் வாழ வேண்டும், அதை பிறரிடம் நாங்கள்  எதிர்பார்பது தவறா….

Sunday, November 4, 2012

என் மனசாட்சி




நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான்.
`ஐயா! 
எனக்கு இன்ன நோய், 
அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்'
என்று கேட்டான். அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
`நல்லது ஐயா!
இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?' என்று கேட்டான் அந்த நோயாளி.
`பத்தியம் வேறொன்றுமில்லை.
லேகியத்தைச் சாப்பிடும் போது,
குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது;
அவ்வளவு தான்!'
என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான்.
பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும்,
எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்;
கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்?
`குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது'
என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால்,
இவன் அதை நினைக்கப் போகிறானா?
கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத்தால்,
மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம்
`குரங்கு, குரங்கு'
என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். 
`ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?' 
என்று கோபத்தோடு கேட்டால், 
`ஐயோ, நான் என்ன செய்வேன்? 
என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்' 
என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும்? 
யாரிடம் கேட்கும்? 
நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்!
அப்படிக் கேட்டால் தான் உனக்கும் அடங்கியது மனது.
மனதுக்கும் அடங்கியவனல்ல மனுஷ்யன்!
மனுஷ்யனுக்கும் அடங்கியதுதான் மனது.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? 
மனத்திலே டென்ஷன் இல்லை
நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது.
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது
என் மனது இப்படிச் சொல்கிறது'
என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மனது சொன்னதை எது கேட்கிறது.
மூளையா, கண்ணா, காதா?
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது.
ஏன்,
அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு,
உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்' என்று?
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யுசலாடுவாய்'
என்றானே பாரதி,
அப்படி ஊசலாடுகின்ற மனதை உடம்புக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்,
வசந்தம் வரலாம்,
பனிக்காலங்கள் வரலாம்,
பருவங்கள் மாறுமே தவிர,
உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட,
உன்னுடைய நிலைமை மாறாது,
மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.
-கவிஞர் கண்ணதாசன்.
என் மனசாட்சி படி நடக்கிறேன்
என் மனசாட்சி படி வேலை செய்கிறேன்
என்று சிலர் சொல்வோம்.
கவிஞர் ஐயா,
உங்க எழுத்து தான் என்றாலும்
இங்கே சிலர் தெ(ரி)ளிந்து கொள்ளவே இந்த பதிவு.