Thursday, December 29, 2011

Money..... Money....... Money.......

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களுடன் ஊழல் ஒழிப்பு முடிந்து விடாது என்று கூறியுள்ள பிரதமர், ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பது அவசியம் என்றும் ஊழலால் மக்கள் பெரிதும் கோபத்தில் உள்ளதாகவும் ஊழல் அரசின் தலைவர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வுத்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் சேவைகளை பெறும்போது ஊழலை சந்திக்கின்றனர் என்றும் திருவாய் மலர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஊழலுக்கு அரசு என்றும் அடிபணியாது என்றும் மக்கள் விரக்தியை களைய லோக் ஆயுக்தா அவசியம் என்றும் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்

இது ஒரு புறம் இருக்க. 

சென்னை போலீஸ் கமிஷனர் திரு.திரிபாதி, நள்ளிரவில் சாதாரண உடையில் போலீஸ் நிலையங்களுக்கு திடீரென சென்று சோதனையிட்டு வருகிறார். சோதனைக்கு செல்லும் போது சொந்த காரில் சென்று வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு டிஜிபி அலுவலகம் அருகே காரில் ரோந்து சென்றுள்ளார். அவரது காரை திடீரென்று ஒரு பெண் மறித்துள்ளார். உதவிக்காக காரை மறிப்பதாக கமிஷனர் திரிபாதி நினைக்க. அந்த பெண்ணோ காரில் இருப்பது கமிஷனர் என்பதை அறியாமல், காரிலேயே உல்லாசமாக இருக்கலாம் என்றும். வெளியில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். அதற்கு தகுந்தாற்போல பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை கேட்டு கண்கள் சிவந்து உடனடியாக மைக்கில் மைலாப்பூர் போலீசாரை அழைத்து விபசார பெண்களை பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். போலீசார் வந்ததை பார்த்ததும் அங்கு கூட்டமாக இருந்த விபசார பெண்கள் தப்பி ஓடினர். பெரம்பூரை சேர்ந்த பெண் மட்டும் சிக்கியுள்ளார். கணவர் குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை என்றும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அதனால்தான் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லி. தன்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இந்த தொழிலுக்கு வரமாட்டேன் என்று அந்த பெண் போலீசாரிடம் கெஞ்சியும் போலீசார் அவரை கைது செய்தனர்.

“பிக்பாக்கெட், விபசாரம்  போன்ற சிறு குற்றங்களில் ஈடு பட்டு பிழைப்பு நடத்துவோரை படம் பிடித்து பொது இடங்களில் வெளிச்சம்
 போட்டு மக்களை எச்சரிக்கும் அரசாங்கம்  கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களைக்கூட வெளியிட
 மறுப்பது ஏன்? `அவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்று தெரிந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?’’

வெளிநாடுகளில் இருக்கிற இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.25 லட்சம் கோடியைத் தாண்டும் என்கிறது குளோபல் ஃபைனான் சியல் இன்டெக்ரடி என்ற அமைப்பு. இவ்வாறு பதுக்கி வைத்திருக்கிறவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோமென விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தெரிவித்திருக்கிறார். இந்த 25 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டால் எவ்வளவு சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ள முடியு மென்பதை சற்று அசை போட்டாலே நமக்குக் கோபம் வரும்.

மத்திய அரசின் பட்ஜெட்டை விட பல மடங்கு கறுப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு தேசிய சவாலாகும். ஆனால் அந்த உணர்வு, நிதியமைச்சரின் பதிலில் இல்லை. 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றிருக்கிறோம், 66 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடு செல்வதைத் தவிர்த்திருக்கிறோம் என்றெல்லாம் கதை சொல்லுகிற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி; கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்கிறார். ஆனால் வெள்ளையறிக்கை வெளியிடுவார்களாம். கொள்ளையடித்தவர்கள் பற்றிய விவரமே இல்லாமல் வெளியிடப்படுவது எப்படி வெள்ளையறிக்கையாகும்?.

கறுப்புப் பண பட்டியலை வெளியிட்டால் வெளிநாடுகளோடு உள்ள உறவு பாதிக்குமென புதுத் தத்துவம் சொல்கிறார். திருடனை பிடித்தால் அவர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது? பிரணாப் தான் விளக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் முதலாளிகள், கான்ட்ராக்டர்கள் போன்றவர்கள் வரி ஏய்ப்பு மூலமும் இதர திருட்டுக் கணக்குகள் மூலமும், அடிக்கிற கொள்ளை லாபம் தான் கொல்லைப்புறம் வழி வெளிநாடு செல்கிறது. இதற்கு சுய நல அரசியல் வாதிகளும், அதிகாரி களும் உடந்தையாக இருக்கிறார்கள். இந்த பொருளாதார மோசடியில் இவர்கள் கூட்டுக் களவாணிகள். இது அரசின் தவறான கொள்கை களின் தொடர் விளைவு ஆகும்.

இதனால் வீங்கிப் பெருத்திருப்பதே கறுப்புப் பணம். உலக மயம் என்பது உலகளாவிய சுரண்டல் என்பதை இது மேலும் உறுதி செய்கிறது. இந்த கொள்கைகளை பாதுகாப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இவர்கள் நாடாளுமன்றத்தில் நடத்துவது நிழல் சண்டையே. கொள்கை மாற்றம் இல்லாமல் அரசியல் உறுதி ஏற்படாது. அரசியல் உறுதி இல்லாமல் கறுப்புப் பண விவகாரத்தில் உருப்படியாய் அரசு எதுவும் செய்யாது. நிதியமைச்சரின் பதில் இதைத்தான் உறுதி செய்கிறது. மக்கள் மன்றம் தான் இதற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும். ஊழலை எதிர்த்த போர் என்பது கறுப்புப் பணத்தை எதிர்த்தும் உலக மயத்தை எதிர்த்தும் நடத்தும் போருடன் இணைந்ததே

0 comments: