Thursday, December 29, 2011

Money..... Money....... Money.......

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களுடன் ஊழல் ஒழிப்பு முடிந்து விடாது என்று கூறியுள்ள பிரதமர், ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பது அவசியம் என்றும் ஊழலால் மக்கள் பெரிதும் கோபத்தில் உள்ளதாகவும் ஊழல் அரசின் தலைவர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வுத்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் சேவைகளை பெறும்போது ஊழலை சந்திக்கின்றனர் என்றும் திருவாய் மலர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஊழலுக்கு அரசு என்றும் அடிபணியாது என்றும் மக்கள் விரக்தியை களைய லோக் ஆயுக்தா அவசியம் என்றும் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்

இது ஒரு புறம் இருக்க. 

சென்னை போலீஸ் கமிஷனர் திரு.திரிபாதி, நள்ளிரவில் சாதாரண உடையில் போலீஸ் நிலையங்களுக்கு திடீரென சென்று சோதனையிட்டு வருகிறார். சோதனைக்கு செல்லும் போது சொந்த காரில் சென்று வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு டிஜிபி அலுவலகம் அருகே காரில் ரோந்து சென்றுள்ளார். அவரது காரை திடீரென்று ஒரு பெண் மறித்துள்ளார். உதவிக்காக காரை மறிப்பதாக கமிஷனர் திரிபாதி நினைக்க. அந்த பெண்ணோ காரில் இருப்பது கமிஷனர் என்பதை அறியாமல், காரிலேயே உல்லாசமாக இருக்கலாம் என்றும். வெளியில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள். அதற்கு தகுந்தாற்போல பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை கேட்டு கண்கள் சிவந்து உடனடியாக மைக்கில் மைலாப்பூர் போலீசாரை அழைத்து விபசார பெண்களை பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். போலீசார் வந்ததை பார்த்ததும் அங்கு கூட்டமாக இருந்த விபசார பெண்கள் தப்பி ஓடினர். பெரம்பூரை சேர்ந்த பெண் மட்டும் சிக்கியுள்ளார். கணவர் குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை என்றும், குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அதனால்தான் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லி. தன்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இந்த தொழிலுக்கு வரமாட்டேன் என்று அந்த பெண் போலீசாரிடம் கெஞ்சியும் போலீசார் அவரை கைது செய்தனர்.

“பிக்பாக்கெட், விபசாரம்  போன்ற சிறு குற்றங்களில் ஈடு பட்டு பிழைப்பு நடத்துவோரை படம் பிடித்து பொது இடங்களில் வெளிச்சம்
 போட்டு மக்களை எச்சரிக்கும் அரசாங்கம்  கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களைக்கூட வெளியிட
 மறுப்பது ஏன்? `அவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்று தெரிந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?’’

வெளிநாடுகளில் இருக்கிற இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.25 லட்சம் கோடியைத் தாண்டும் என்கிறது குளோபல் ஃபைனான் சியல் இன்டெக்ரடி என்ற அமைப்பு. இவ்வாறு பதுக்கி வைத்திருக்கிறவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோமென விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தெரிவித்திருக்கிறார். இந்த 25 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டால் எவ்வளவு சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ள முடியு மென்பதை சற்று அசை போட்டாலே நமக்குக் கோபம் வரும்.

மத்திய அரசின் பட்ஜெட்டை விட பல மடங்கு கறுப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு தேசிய சவாலாகும். ஆனால் அந்த உணர்வு, நிதியமைச்சரின் பதிலில் இல்லை. 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றிருக்கிறோம், 66 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடு செல்வதைத் தவிர்த்திருக்கிறோம் என்றெல்லாம் கதை சொல்லுகிற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி; கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்கிறார். ஆனால் வெள்ளையறிக்கை வெளியிடுவார்களாம். கொள்ளையடித்தவர்கள் பற்றிய விவரமே இல்லாமல் வெளியிடப்படுவது எப்படி வெள்ளையறிக்கையாகும்?.

கறுப்புப் பண பட்டியலை வெளியிட்டால் வெளிநாடுகளோடு உள்ள உறவு பாதிக்குமென புதுத் தத்துவம் சொல்கிறார். திருடனை பிடித்தால் அவர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது? பிரணாப் தான் விளக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் முதலாளிகள், கான்ட்ராக்டர்கள் போன்றவர்கள் வரி ஏய்ப்பு மூலமும் இதர திருட்டுக் கணக்குகள் மூலமும், அடிக்கிற கொள்ளை லாபம் தான் கொல்லைப்புறம் வழி வெளிநாடு செல்கிறது. இதற்கு சுய நல அரசியல் வாதிகளும், அதிகாரி களும் உடந்தையாக இருக்கிறார்கள். இந்த பொருளாதார மோசடியில் இவர்கள் கூட்டுக் களவாணிகள். இது அரசின் தவறான கொள்கை களின் தொடர் விளைவு ஆகும்.

இதனால் வீங்கிப் பெருத்திருப்பதே கறுப்புப் பணம். உலக மயம் என்பது உலகளாவிய சுரண்டல் என்பதை இது மேலும் உறுதி செய்கிறது. இந்த கொள்கைகளை பாதுகாப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இவர்கள் நாடாளுமன்றத்தில் நடத்துவது நிழல் சண்டையே. கொள்கை மாற்றம் இல்லாமல் அரசியல் உறுதி ஏற்படாது. அரசியல் உறுதி இல்லாமல் கறுப்புப் பண விவகாரத்தில் உருப்படியாய் அரசு எதுவும் செய்யாது. நிதியமைச்சரின் பதில் இதைத்தான் உறுதி செய்கிறது. மக்கள் மன்றம் தான் இதற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும். ஊழலை எதிர்த்த போர் என்பது கறுப்புப் பணத்தை எதிர்த்தும் உலக மயத்தை எதிர்த்தும் நடத்தும் போருடன் இணைந்ததே

Thursday, October 6, 2011

செய் ஏதாவது செய்

20 ஆண்டுகளுக்கு மேலாக    15ஆயிரம் கோடி                                 

மக்கள் வரி பணம் செலவிட்டு இறுதி கட்டத்துக்கு வந்து இந்தாண்டு கடைசியில் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கும்  அதில் பாதி தமிழகத்துக்கு கிடைக்கும் என்ற நிலையில் இந்த திருப்பம் ஏற்பட்டிருப்பது மாநிலத்தின் ஏனைய பகுதி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடும். மின்சார தட்டுப்பாடு காரணமாக வீட்டிலும் வெளியிலும் தமிழக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லி
 தெரியவேண்டியதில்லை.


உலகில் 450க்கு மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. சீனா போன்ற நாடுகள் 30க்கும் மேற்பட்ட அணு உலைகளை புதிதாக நிறுவிக் கொண்டிருக்கின்றன. ஜப்பானில் சுனாமியால் நேர்ந்த சோகத்துக்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் அதிகரித்த போதிலும், பெரும்பாலான நாடுகள் அணு மின் உற்பத்தி திட்டங்களை
கைவிடவில்லை.
ஆபத்து இல்லாத இடம்தான் ஏது? பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதில் அவை தீவிரம் காட்டுகின்றன.
இங்கேயும் நிலம் கையகப்படுத்திய நேரத்திலேயே பிரதிநிதிகள் என்று சுருக்காமல் ஊர்மக்களை அழைத்து
அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து, சந்தேகங்களுக்கு நேர்மையான விளக்கம் அளித்து,
அவர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தால் இழுபறியை தவிர்த்திருக்கலாம். இருட்டுக்கு பழகிவிட்டால் வெளிச்சம்
தேவையில்லைதான். 

அடிப்படை கட்டமைப்பான மின்சார பற்றிய தொலை நோக்கு இல்லாமல்  பன்னாட்டு நிறுவனகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களுக்கும் மின்சாரம் இல்லாமல், குடிமக்களையும்  மின்சாரம் இல்லாமல்தவிக்க விட்டு மொத்ததில் குழம்பி நிற்கும் கையாளாகாத அரசுகளை என்ன செய்ய...?


ஏ....! மக்கள்  நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகளே ஊழலில் திளைத்து கொண்டிருப்பதை விட்டு மக்களுக்கு
மின்சாரம் சீராக கிடைக்க செய்யுங்கள் ஏதாவது செய்யுங்கள்

Wednesday, July 13, 2011

கண்ணை கட்டி கொள்ளாதே

தில்சன் என்ற சிறுவனை சுட்டுக்கொன்ற ரானுவ மிருகம் பிடிப்பட்ட செய்தி கூட அடங்கிபோயிற்று. இருப்பினும் அந்த மிருகத்தின் சொம்பு தூக்கிகளின் துதிப்படல்கள் ஓய்ந்தபடில்லை. ஒன்றுமறியா சிறுவனை சுட்டுக்கொன்றதே பாவம், அதனை பாராட்டும் மிருகங்களை என்னவென்று சொல்வது, தொப்பி தொப்பி என்ற சொம்பு தூக்கி பற்றிய பதிவே இது.

இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியனுக்கும் தேச பற்று கண்டிப்பாக இருக்கும், அது என்னவோ இவருக்கு மட்டுமே உள்ளது போலவும் ரானுவத்தினரை ஒரேடியாக தூக்கி பிடித்து தனது அரைவேக்காட்டு +கேவலமான தேச பற்றினை வெளிபடுத்தியிருக்கிறார். இது போன்று  பரபரப்பாக எழுதுவதால் தன்னை ஒரு புரட்சி எழுத்தாளன் என்று பிறர் பாராட்டுவார்கள் என்ற எண்ணம் போல, இதே இவன் வீட்டு பிள்ளை பந்து விளையாடும் போது அது பக்கத்து வீட்டில் விழுந்து அதை எடுக்க போகும் பொழுது அந்த வீட்டுக்காரன் இவர் பிள்ளையை நாயை விட்டு கடிக்க விட்டால் சும்மா விடுவாரா என்ன...? அல்லது இவர் அந்த பக்கத்து வீட்டுகாரரை பாராட்டி பரிசு கொடுப்பாரா என்ன....? ஒரு வேளை, இவர் பரிசு கொடுத்தால் நானும் தில்சன் செய்தது தவறு என்றும் அவனை ரானுவ அதிகாரி சுட்டது சரி என்று ஒத்துகொள்கிறேன். குருட்டு பூனைக்கு உலகமே இருட்டு என்பது போன்றது அவரின் கரு(ம) (த்து)கள். இவர் இந்த கேவலமான பதிவு எழுதிவிட்டு அதற்கு விளக்கம் வேறு தனது பின்னுட்டங்களில் தருகிறார் அது தான் மிகபெரிய நகைப்பு, அந்த பதிவுக்கு ஓட்டளித்தவர்களுக்கும் இதே கேள்வியை முன் வைக்கிறேன். பதில் கூற தயாரா......? மனச்சாட்சி இல்லாதவர்களும், மனித நேயமில்லாதவர்களும் தான் கண்டிப்பாக பதில் அளிப்பார்கள் என்று நினைக்கிறேன், அதெல்லாம் எனக்கு ஒன்றும் இல்லை  பதில் அளிப்பவர்கள், அவர்களோ அல்லது அவர்களை சார்ந்தவர்க்கோ ஆபத்து காலத்தில் ரத்தம் வேண்டியோ அல்லது, வேறு ஏதும் உதவிகள் அடுத்தவரிடம் கேட்கமாட்டேன் என்று உறுதி அளிப்பார்களேயானால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகிறேன்.

நான் அரசியல் வாதிகளையும், மக்களை சுரண்டுபவர்களை பற்றி மட்டுமே என் பதிவுகளில்  சுட்டுகாட்டியிருக்கிறேன். ஒரு சில பதிவர்கள் போல் விளம்பரத்திற்காக இதை எழுதவில்லை சமூகத்தில் நான் படிக்கும்,கேட்கும் செய்திகளில் என் கருத்தை பதியவே பதிவு எழுதி வருகின்றேன். திலசன் கொலையை நியாயபடுத்தும் அத்தனை அரை வேக்காடுகளுக்கும் எனது கடுமையான கண்டணத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிவுலகம் என்பது மற்றுமொறு ஊடகம் என்பதே உண்மை. அதில் தில்சன் கொலையை  நியாயபடுத்துவது போன்ற எந்த விஷம கருத்துகளை எழுதாதீர்.

தொப்பி தொப்பி என்ற (அரை வேக்காடு) சொம்பு தூக்கி இதை படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி, அவரின் சொம்பு தூக்கிகள்(அரை வேக்காடு) இதை படித்தாலும் சரி படிக்கவிட்டாலும் சரி,அல்லது படித்தவர்கள் அவரிடம் சொன்னாலும் சரி. கடைசியாக ஓரே ஓரு கேள்வி நேதாஜி பற்றி என்ன தெரியும் என்று அவரின் புகைபடத்தை வைத்திருக்கிறீர்கள். அவரை கேவலபடுத்தவே அவரின் புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் அதற்கும் ஒரு கண்டனத்தை பதிவு செய்கிறேன்.  

Tuesday, June 21, 2011

ஒரு முறை, இருமுறை, பலமுறை

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15) என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மாணவர்களிடையே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

கல்வி என்பது அறிவு, பண்பு, பகுத்தறிதல் போன்றவற்றை வளர்த்து கொள்வதே தவிர மதிப்பெண் வாங்குவது மட்டும் அல்ல, ஆனால் இன்றைய ஆசிரியர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிக மதிப்பெண் பெறுவதிலே குறியாக உள்ளனர். அதனால் தான் இது

 போன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்கின்றன ஒரு வகுப்பில் படிக்கும் அத்தனை மா
வர்களும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பில்லை, ஒரு சில சுமாராக படிக்க கூடிய மாணவர்களும் இருக்கலாம் அவர்களையும் ஊக்குவித்து அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் அதை விடுத்து அவர்களை பிற மாணவர்கள் முன்னிலையில் கேவலமாக திட்டுதல், அடித்தல், தண்டித்தல் போன்ற செயல்கள் அவர்களை தற்கொலை முடிவை எடுக்க தூண்டுகிறது. ஒரு முறை, இருமுறை, பலமுறை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்களும் வெற்றி பெற செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்பதை அவர்கள் என்று உணர போகிறார்களோ.......? 

Wednesday, March 30, 2011

மாத்தி யோசி

இந்தியாவிலேயே ஆச்சரியத்தைக் கொடுக்கும் திறன் ஒருவருக்கு உண்டென்றால், அவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என உறுதியாகச் சொல்லலாம். அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிவதில் முதலிடம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்து.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.

மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு, தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், அதிவேக இனணய தள இணைப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறார். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம். மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள்,என்று கலக்குகுகிறார். மோடி முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.

இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது. மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறார்கள். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளது.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது

இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் அவர்கள் கவனம் செலுத்துவது தான்.

கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில்,12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது போன்று நம் மாநிலத்துக்கு ஒரு முதல்வர் கிடைக்காதா, இந்த பாழாய் போன திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து அவர்கள் அடித்த கொள்ளைகள், சொல்லிமாளாது. இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ன.......? கொஞ்சம் மாத்தி யோசிப்போமே.

Tuesday, March 29, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஏழைகளின் காவலன்
தமிழர்களின் துயர் துடைக்க அவதரித்த திரு. கருணாநிதி,
மணல் கடத்தல்,
அரிசிக் கடத்தல்,
கந்து வட்டிக் கொடுமை ஆகியவற்றை ஒழிக்க
திமுக நடவடிக்கை எடுக்குமாம்.
அப்ப கடந்த 5 ஆண்டுகள் என்ன செய்தார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை இவர் ஆட்சியில் தான் எவ்வளவு கொடுமைகள் நடக்கவில்லை என்று கூறுகிறாரா...?
நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டு,
மீண்டும் வாய்ப்பளித்தால் ஒழிப்பேன் என்று சிறிதும் வெட்கமில்லாமல் கூறுகிறார்.

மணல் கடத்தலைத் தடுத்த அதிகாரிகள் பலர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்தது இந்த ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைகிறார் போல.

இவரது பொன்னான ஆட்சியில் தான்
கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா கந்துவட்டிக் கொடுமையிலும்,
மற்றவர்களது சொத்துக்களை அபகரிக்க முயன்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு
அதனாலேயே அவர் அமைச்சர் பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது  இவர் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பினையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் தலைமறைவானார். 
அவர் மீதான குற்ற வழக்குகள் முடிவு பெறாத நிலையில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
குற்றவாளி களை அரவணைப் பதிலும்
ஆதரவு அளிப்பதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தையே வெட்டிச்சாய்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட உறவினருக்கு சிறைக்குச் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

திமுகவில் கிரிமினல்கள் எந்த அளவிற்கு செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்லலாம்.
புதுச்சேரியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.கே. ரமேஷ்,
கருணாநிதியை சந்திக்கும்போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த அளவிற்கு நல்ல மனிதர் அவர் மீது நான்கு கொலை வழக்குகள்,
ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டபோது தலைமறைவாக இருந்த அவர் ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தைரியத்தில் வெளியே வந்தபோதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நபர்களை அருகில் வைத்துக்கொண்டு
கந்து வட்டியையும் கிரிமினல்களையும் ஒழிப்பேன்
என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது
உண் மையிலேயே வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
கதாசிரியர் என்று பெயரெடுத்தவரின் கதையை,
மக்கள்   வாக்குச்சாவடியில் 
அவரின் கதை (ஆட்சி) முடிவை
எழுத வேண்டும்.  
என்ன தான் நடக்கும் நடக்க்கட்டுமே

Tuesday, March 22, 2011

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்

திமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று அவர்களுக்கு அவர்களே புகழ்மாலை சூட்டிக்கொள்கிறார்கள். இந்தப் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழக மக்களைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மின்வெட்டுப் பிரச்சனையால் அவதிப்படும் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு தொழில் துறை யினரும் விவசாயிகளும் இந்த ஆட்சியை ஒரு இருண்ட கால ஆட்சி என்றே கருதுகின்றனர்.

திமுக ஆட்சியிலிருக்கும் வரை மின்வெட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இனிமேல் மின்வெட்டு இருக்காது என்று புதிய புதிய தேதிகளை திமுகவினர் அறிவிக்கின்றனர். ஆனால் ஏற்கெனவே சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் இரண்டு மணி நேர மின்வெட்டு என்பது தற்போது மூன்று மணி நேரம், மூன்றரை மணி நேரம் என்று நீட்டிக்கப்படுவதுதான் கண்டபலன்.

ஒவ்வொரு முறை மின்வெட்டு நீட்டிக்கப்படும் போதும் காற்றடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று புதிய புதிய காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறுகின்றனர். ஆனால் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கான எந்தவிதத் தொலைநோக்குத் திட்டமும் திமுக அரசிடம் இல்லை என்பது தான் உண்மை.

தற்காலிகத் தீர்வுகளான மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் கோரிப்பெறுவது, அண்டை மாநிலங்களிடம் மின்சாரம் பெறுவது போன்றவற்றையும் கூட முறைப்படி செயல் படுத்துவதில்லை. எவ்வளவுதான் மின்வெட்டு இருந்தாலும் கடைசி நேரத்தில் சில இலவசத் திட்ட அறிவிப்புகள் மூலமும், பணம் மற்றும் அதிகார பலத்தின் மூலமும் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்பதுதான் திமுகவின் கணக்காக உள்ளது.

வாக்களித்த மக்களுக்கு மட்டும்தான் மின் வெட்டு. பன்னாட்டு நிறுவன ஆலைகளுக்கு மின்வெட்டு இல்லை. மின்வெட்டு இருந்தால் அதற்கு அபராதம் என்ற உடன்பாட்டின் அடிப்படையில்தான் பன்னாட்டு நிறுவன ஆலைகள் துவங்கப்படுகின்றன.

மறுபுறத்தில் மின்வெட்டுகாரணமாக சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிறுதொழில் மற்றும் நெசவுத் தொழில் மின்வெட்டினால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது.

கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று டோக்கன் வழங்கிக்கொண்டிருப்பது போல விவசாயி களுக்கு இலவச பம்ப்செட் என்ற திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பம்ப் செட் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள், மின் வெட்டினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பதுதான் உண்மை.

தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் தான் வழங்கப்படுகிறது என விவசாயிகள் குமுறுகின்றனர்.

கோடைக்காலம் உக்கிரமாகத் துவங்கிவிட்ட நிலையில் மின்வெட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதைச் சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மின்வெட்டு, தமிழகத்தில் திமுகவின் அதிகார வெட்டுக்கு வழிவகுக்கும். ஒரு வேளை தி.மு.க ஆட்சியை பிடிக்குமாயின் தி.மு.க. ஜெயித்ததால் தான் சூரியனே ஒளி வீசுகிறது என்று பாராட்டு விழா எடுப்பார்கள் அவர்களின் அடிவருடிகள்,  பண பலம் ஜெயித்தால் விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம் என்று தமிழக மக்கள் வீட்டிற்க்கு வீடு பாடல் கேட்கும்  என்பது மட்டும் உறுதி. 

Monday, January 24, 2011

விடிகின்ற பொழுது

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் இலவச டி.வி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற்றுள்ளது. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்துவிட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல. வர்லாற்றில் இடம் பெற வேண்டிய கடிதம்.
”மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.
ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”
விஜயகுமாரின் கடிதம் கடிதம் அல்ல. செருப்பு. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த செருப்படி. விஜயகுமார் போல ஒவ்வொரு தமிழனும் சிந்தித்தால் தமிழகம் கொடுங்கோல், கலிக்கூத்தான இருண்ட ஆட்சியிலிருந்து விடிகின்ற பொழுது விரைவில் வரும் என்பது சந்தேகமில்லை

Thursday, January 13, 2011

தகிடு தத்தம்

இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியோடு அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வண்டிகளுக்கு அழைப்புகள் திருப்பிவிடப்படு கின்றன. விபத்துகள் மட்டுமின்றி, பெண்களைச் சீண்டுதல் ஆகியவை பற்றியும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த வசதி துவக்கப்பட்டது. இந்த சேவையைத் துவக்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகமாகும். 108 அழைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண் டும் கட்டணமில்லாமல் மக்களுக்குக் கிடைத்தது. உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை கூடுதல் கவனத்தோடு பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் மேலும் கூர்மையோடு கவனித்தபோதுதான் இந்த விளம் பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள்ளார்கள் என்பது தெரிந்தது.

சென்னையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைக் கேட்டார். மக்களுக்கு வசதி செய்து தரும் இந்த சேவைக்காக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் இலவசமாக சேவை செய்கிறார்களோ என்று நினைத்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் அவருக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பரத்திற்காக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அரசால் தரப்பட்டுள்ளது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்க மிட்டவர்கள், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று மாறியுள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும் திட்டங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரசு கஜானாவிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். பத்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம் புலன்ஸ் விரைகிறதாகக் காட்டப்படும் விளம்பரங்களை ஒருமுறை ஒளிபரப்ப சன் டி.வி. 23 ஆயிரத்து 474 ரூபாயும், கலைஞர் டி.வி. 9 ஆயிரத்து 700 ரூபாயும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு வசதி என்றபோதிலும், மருத்து வத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாகவே புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த 108 சேவை என்பது மோசடி மன்னன் சத்யம் ராமலிங்க ராஜூவின் மூளையில் உதித்ததாகும். மாநில அரசுகளிடமிருந்து பணத்தைக் கறக்கவே இந்தத்திட்டம் கொண்டு வரப்பட்டது. .

மக்கள் பணத்தையே எடுத்து தனியார் நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்ப நிறு வனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, இலவச சேவை என்று மக்களின் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல், சட்டினியே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன-தாராளமயம் பல ஒப்பனைகளோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பனை கலைந் துள்ளது. அதன் கோர வடிவம் அம்பலமாகியுள்ளது. கலைஞர் ஆட்சியின் தகிடு தத்தம் வேலைகளில் இதுவும் ஒன்று இன்னும் எத்தனையோ