Tuesday, March 22, 2011

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்

திமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று அவர்களுக்கு அவர்களே புகழ்மாலை சூட்டிக்கொள்கிறார்கள். இந்தப் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழக மக்களைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் மின்வெட்டுப் பிரச்சனையால் அவதிப்படும் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு தொழில் துறை யினரும் விவசாயிகளும் இந்த ஆட்சியை ஒரு இருண்ட கால ஆட்சி என்றே கருதுகின்றனர்.

திமுக ஆட்சியிலிருக்கும் வரை மின்வெட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இனிமேல் மின்வெட்டு இருக்காது என்று புதிய புதிய தேதிகளை திமுகவினர் அறிவிக்கின்றனர். ஆனால் ஏற்கெனவே சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் இரண்டு மணி நேர மின்வெட்டு என்பது தற்போது மூன்று மணி நேரம், மூன்றரை மணி நேரம் என்று நீட்டிக்கப்படுவதுதான் கண்டபலன்.

ஒவ்வொரு முறை மின்வெட்டு நீட்டிக்கப்படும் போதும் காற்றடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று புதிய புதிய காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறுகின்றனர். ஆனால் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கான எந்தவிதத் தொலைநோக்குத் திட்டமும் திமுக அரசிடம் இல்லை என்பது தான் உண்மை.

தற்காலிகத் தீர்வுகளான மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் கோரிப்பெறுவது, அண்டை மாநிலங்களிடம் மின்சாரம் பெறுவது போன்றவற்றையும் கூட முறைப்படி செயல் படுத்துவதில்லை. எவ்வளவுதான் மின்வெட்டு இருந்தாலும் கடைசி நேரத்தில் சில இலவசத் திட்ட அறிவிப்புகள் மூலமும், பணம் மற்றும் அதிகார பலத்தின் மூலமும் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்பதுதான் திமுகவின் கணக்காக உள்ளது.

வாக்களித்த மக்களுக்கு மட்டும்தான் மின் வெட்டு. பன்னாட்டு நிறுவன ஆலைகளுக்கு மின்வெட்டு இல்லை. மின்வெட்டு இருந்தால் அதற்கு அபராதம் என்ற உடன்பாட்டின் அடிப்படையில்தான் பன்னாட்டு நிறுவன ஆலைகள் துவங்கப்படுகின்றன.

மறுபுறத்தில் மின்வெட்டுகாரணமாக சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிறுதொழில் மற்றும் நெசவுத் தொழில் மின்வெட்டினால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது.

கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று டோக்கன் வழங்கிக்கொண்டிருப்பது போல விவசாயி களுக்கு இலவச பம்ப்செட் என்ற திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பம்ப் செட் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள், மின் வெட்டினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பதுதான் உண்மை.

தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் தான் வழங்கப்படுகிறது என விவசாயிகள் குமுறுகின்றனர்.

கோடைக்காலம் உக்கிரமாகத் துவங்கிவிட்ட நிலையில் மின்வெட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இதைச் சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. மின்வெட்டு, தமிழகத்தில் திமுகவின் அதிகார வெட்டுக்கு வழிவகுக்கும். ஒரு வேளை தி.மு.க ஆட்சியை பிடிக்குமாயின் தி.மு.க. ஜெயித்ததால் தான் சூரியனே ஒளி வீசுகிறது என்று பாராட்டு விழா எடுப்பார்கள் அவர்களின் அடிவருடிகள்,  பண பலம் ஜெயித்தால் விளக்கு வைப்போம், விளக்கு வைப்போம் என்று தமிழக மக்கள் வீட்டிற்க்கு வீடு பாடல் கேட்கும்  என்பது மட்டும் உறுதி. 

2 comments:

தமிழ்வாசி - பிரகாஷ் said...

விளக்கு வைக்க ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக கொடுக்கப்படும். மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும்.


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்ல பதிவு.ஹா ஹா!