Monday, January 24, 2011

விடிகின்ற பொழுது

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் இலவச டி.வி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற்றுள்ளது. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்துவிட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல. வர்லாற்றில் இடம் பெற வேண்டிய கடிதம்.
”மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.
ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”
விஜயகுமாரின் கடிதம் கடிதம் அல்ல. செருப்பு. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த செருப்படி. விஜயகுமார் போல ஒவ்வொரு தமிழனும் சிந்தித்தால் தமிழகம் கொடுங்கோல், கலிக்கூத்தான இருண்ட ஆட்சியிலிருந்து விடிகின்ற பொழுது விரைவில் வரும் என்பது சந்தேகமில்லை

2 comments:

பாரி தாண்டவமூர்த்தி said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்...

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

http://blogintamil.blogspot.com/2011/03/1.html

SEO Tricks 2011 said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com