Sunday, November 4, 2012

என் மனசாட்சி




நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான்.
`ஐயா! 
எனக்கு இன்ன நோய், 
அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்'
என்று கேட்டான். அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
`நல்லது ஐயா!
இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?' என்று கேட்டான் அந்த நோயாளி.
`பத்தியம் வேறொன்றுமில்லை.
லேகியத்தைச் சாப்பிடும் போது,
குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது;
அவ்வளவு தான்!'
என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான்.
பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும்,
எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்;
கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்?
`குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது'
என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால்,
இவன் அதை நினைக்கப் போகிறானா?
கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத்தால்,
மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம்
`குரங்கு, குரங்கு'
என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். 
`ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?' 
என்று கோபத்தோடு கேட்டால், 
`ஐயோ, நான் என்ன செய்வேன்? 
என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்' 
என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும்? 
யாரிடம் கேட்கும்? 
நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்!
அப்படிக் கேட்டால் தான் உனக்கும் அடங்கியது மனது.
மனதுக்கும் அடங்கியவனல்ல மனுஷ்யன்!
மனுஷ்யனுக்கும் அடங்கியதுதான் மனது.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? 
மனத்திலே டென்ஷன் இல்லை
நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது.
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது
என் மனது இப்படிச் சொல்கிறது'
என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மனது சொன்னதை எது கேட்கிறது.
மூளையா, கண்ணா, காதா?
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது.
ஏன்,
அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு,
உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்' என்று?
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யுசலாடுவாய்'
என்றானே பாரதி,
அப்படி ஊசலாடுகின்ற மனதை உடம்புக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்,
வசந்தம் வரலாம்,
பனிக்காலங்கள் வரலாம்,
பருவங்கள் மாறுமே தவிர,
உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட,
உன்னுடைய நிலைமை மாறாது,
மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.
-கவிஞர் கண்ணதாசன்.
என் மனசாட்சி படி நடக்கிறேன்
என் மனசாட்சி படி வேலை செய்கிறேன்
என்று சிலர் சொல்வோம்.
கவிஞர் ஐயா,
உங்க எழுத்து தான் என்றாலும்
இங்கே சிலர் தெ(ரி)ளிந்து கொள்ளவே இந்த பதிவு.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் பொறுத்தே அனைத்தும் என்பதை அருமையாக (எழுத்து வடிவிலும் பெரிதாக) பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

வாழ்த்துக்கள் பல...

இராஜராஜேஸ்வரி said...

மனதைப்பற்றி
மகத்தான பதிவுக்கு பாராட்டுக்கள்..