Thursday, November 4, 2010

நீயின்றி நானும் இல்லை

சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில் நோக்கியா செல்போன் நிறுவனத்தில் அம்பிகா (வயது 23) முதல் ஸ்டேஜ் பிரிவில் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்துள்ளார். எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய டெக்னீஷியன்களை அழைத்துள்ளார். அவர்கள் வராததால், எந்திரத்திற்குள் தலையை விட்டு சரி செய்ய முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் இயங்க ஆரம்பித்தது. அதனால் எந்திரத்திற்குள் அவர் கழுத்து மாட்டிக் கொண்டு நசுங்கியது.

இதை பார்த்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து எந்திரத்தை நிறுத்துமாறு டெக்னீஷியன்களிடம் கூறியிருக்கின்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு எந்திரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் கையில் டூல்ஸ் இல்லாததால் எந்திரத்தை பிரித்து உடனடியாக அம்பிகாவை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த எந்திரத்தை உடைத்து அம்பிகாவை மீட்க ஊழியர்கள் முயற்சித்தனர் விலை உயர்ந்த எந்திரத்தை உடைக்கக் கூடாது என்று அவர்களை நிர்வாகத்தினர் தடுத்து விட்டனர். இதன் பின்னர் எந்திரத்தை பிரித்து 30 நிமிடங்கள் கழித்து அம்பிகாவை வெளியே எடுத்தபோது அவர் இறந்துகிடந்தார்.

 தனது தவறுகளை மூடி மறைக்க கம்பெனிக்கு நிர்வாகம் விடுமுறை அளித்ததோடு, அந்த எந்திரத்தையே அங்கிருந்து அகற்றிவிட்டது. பின்னர் அம்பிகாவின் உடலை நுங்கம்பாக்கம் அப்போலோ மருத்துவ மனைக்கு உடலை கொண்டு சென்றனர். அதுவரை இந்த விபத்து குறித்து புகார் எதுவும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை.

அம்பிகா, 58ஆண்டுகாலம் பணியாற்றினால் எவ்வளவு ஊதியம் பெறுவாரோ அந்த தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். காப்பீட்டு தொகை மற்றும் பணிக்கொடையை வழங்க வேண்டும். அதுவரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாது என்று கூறி ஊழியர்கள், உறவினர்கள் பிணவறை முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். இது குறித்து 8ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது

இதேபோல் பி.ஒய்.டி. என்ற எலக்ட்ரானிக்ஸ், ஹுண்டாய், ஃபோர்டு, லூமாக்ஸ், ஹவாசின், சான்மினா போன்ற ஏராளமான நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொழிற்சாலை ஆய்வாளர்கள், தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிற்சங்க அங்கீகாரச்சட்டம் அவசியம். இல்லை என்றால் இது போல பல அம்பிகாக்கள் இறந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்ள போவதில்லை. 

சமீபத்தில் கூட முதல்வர் ஒரு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நீயின்றி நானும் இல்லை என்று தொழிலாளர் வர்கத்தினருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவர் துயர் துடைக்க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் ஆளாக நான் நிற்பேன் என்று கூறினார் இந்த துயர சம்பவத்திற்கு என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.  

0 comments: