Tuesday, October 26, 2010

நானே இந்திரன் நானே சந்திரன்

ஈராக் போரின்போது அமெரிக்கா தலைமை யிலான கூட்டுப்படையினரால் 66 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

வளைகுடா போரின் போது ஈராக் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சித்ரவதை குறித்த விவரங்களும் இந்த இணையதளத் தினால் வெளியிடப்பட்டுள்ளது. அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மக்களை நிர்வாணமாக்கி அமெரிக்கப் படையினர் கொடுமைப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியான நிலை யில் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஈராக் போர் தொடர்பான 4 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்த உடனேயே அமெரிக்காவும், அதன் அக்கிரமங்களுக்கு துணை நின்ற நாடுகளும் பதறின. இந்தத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைப்பது குறித்து ஆராய பென்டகன் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அமெரிக்காவினால் மறுக்க முடியவில்லை. மாறாக, இந்த ஆவணங்களால் ஈராக் மக்களுக்கும் அந்நாட்டில் உள்ள பன்னாட்டு வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறது அமெரிக்கா.

ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா கூறிய காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை அந்த நாடே ஒத்துக்கொண்டுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக கூறிக்கொண்டு அந்நாட்டுக்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மக்களை படு கொலை செய்து, அந்நாட்டின் ஜனாதிபதியையும் தூக்கில் போட்டது அமெரிக்கா. ஆனால் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதம் எதுவும் இல்லை என்று சர்வசாதாரணமாக பிறகு கூறியது அமெரிக்கா.

ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதே அமெரிக்காவின் நோக்கம். அந்த நாட்டு மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு எண்ணெய் வளத்தை இன்றுவரை சுரண் டிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. தங்களது அத்துமீறல்களை நியாயப்படுத்த பொம்மை அரசாங்கம் ஒன்றையும் நிறுவியது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதாக பம்மாத்து வேறு.

ஆனால் ஈராக் மக்கள் அமெரிக்காவின் அராஜகத்தை ஏற்கவில்லை. பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொன்று ஒழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த அடாவடிப் போரில் தனது சொந்த நாட்டு வீரர்களையும் ஈடுபடுத்தி, பலிகொடுத்து, அவர்களது குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நிகழ்த்தியுள்ள படுகொலைகள், சித்ரவதைகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன. ஐ.நா. அனுமதியின் பேரிலேயே ஈராக் மீது போர் தொடுப்பதாக அமெரிக்கா கூறிய நிலையில் உலகில் நானே இந்திரன் நானே சந்திரன் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா செய்துள்ள அட்டுழியங்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்குமா.....?

0 comments: