Thursday, September 30, 2010

உனக்கென நான் எனக்கென நீ

அயோத்தி இட சர்ச்சை தொடர்பான வழக்கில் இன்று 30ஆம் தேதி தீர்ப்பு வெளியாகிறது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பினை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரித்தாளும் கலையில் தேர்ந்தவர்களான பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் பிரச்சனையை துவக்கி வைத்தனர். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ராமர் கோவில் இருந்ததா என்ற சர்ச்சை தொடர்பான வழக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனிடையே ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இதை தனது மதவெறி நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. அத்வானியின் ரத யாத்திரையின் தொடர்ச்சியாக கரசேவை என்ற பெயரில் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்தப் பிரச்சனையை இடியாப்பச் சிக்கலாக்கியதில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசுகளுக்கு பெரும் பங்கு உண்டு. எனவே இப்போது அந்தக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பேச்சுவார்த்தை மூலம் பிரச்ச னைக்கு தீர்வு காண முயலும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான வழிமுறையை யோசிக்குமாறு உச்சநீதி மன்றத்தின் தனி நீதிபதி யோசனை கூறிய நிலையில், வழக்கோடு தொடர்புடைய யாரும் அதற்கு தயாராக இல்லை. நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே அவர்களது நிலையாக இருந்தது. நீண்ட நெடுங்காலமாக இழுத் தடிக்கப்படும் இந்த வழக்கில் தீர்ப்பு வரவேண்டும், தீர்ப்பினால் பாதிக்கப்படும் தரப்பு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது என்பதே மதச்சார்பற்ற சக்திகளின் கருத்தாக இருந்தது.

அயோத்தி இட உரிமை தொடர்பான வழக்கு தான் இது. பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய வழக்கில் அத்வானி உள்ளிட்ட சங்பரி வாரத் தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள னர். அந்த வழக்கும் தொடர்ந்து முடக்கப்பட்டு வரு கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பல நூறு வருடங்களாக சகோதரர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் உனக்கென நான் எனக்கென நீ என்று இருந்து வரும் நிலையில் அயோத்தி இட சர்ச்சை வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதியையும் நல்லிணக் கத்தையும் நிலைநாட்டுவது இந்தியர்கள் அனைவரது பொறுப்புமாகும்.

மேலே உள்ள புகைபடம் ஒரு நாளிதழில் வெளிவந்தது இதற்கு விளக்கம் தேவை இல்லை அந்த சிறார்களுக்கு இருக்கும் மனபான்மை இந்தியர் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதே ஒரு உண்மையான இந்தியனின் விருப்பம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.

Wednesday, September 29, 2010

உலகில் இந்த

ஐ.நா.,வின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பல்கலைக்கழகம் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தொகையில், உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள நம் நாட்டில், சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்துபவர்களை காட்டிலும், மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனராம்.. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், 54 கோடியே 50 லட்சம் பேர் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனராம். இது மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம்.அதே நேரத்தில், 31 சதவீதமான 36 கோடியே 60 லட்சம் மக்கள் மட்டுமே நவீன கழிப்பறையை பெற்றுள்ளனர். ஒரு கழிப்பறைக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்ட 16 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது சரி இந்த ஆய்வு முடிவை  நம்ம ஆட்சியாளர்கள் பார்த்தால் போதும் உடனே உலக வங்கியிடம் இந்த புள்ளி விவரத்தை காட்டி கடன் பெற்று பங்கு பிரித்து உலகில் இந்த கொடுமையெல்லாம் வேறு எங்கும் நடக்காது.

Monday, September 27, 2010

எங்கே....? எங்கே...?

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.  நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பெரிய கோவிலுக்குள் பிரதான நுழைவு வாயில் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.
பெரிய கோவிலின் பிரதான நுழைவு வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.

பெரியாரின் முதல் தீவிர சீடன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து பிரதான நுழைவு வாயில் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் பிரதான நுழைவு வாயில் வழியாக நேற்று வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் நுழைந்து அந்த மூட நம்பிக்கைக்கு உரமேற்றியிருக்கிறார். மேடைக்கு மேடை தன்னை பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சீடன், என்று முழங்கிய பகுத்தறிவாளர் எங்கே....? எங்கே...? தேடினாலும் கிடைக்க மாட்டார்.

Sunday, September 26, 2010

நீ பாதி நான் பாதி

காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் எனச் செய்திகள் குவிகின்றன. ஆனால், சுரேஷ் கல்மாடியும் அரசு அதிகாரிகளும், அசருவதாகத் தெரியவில்லை. சுகாதாரம், சுத்தமின்மை, பயங்கரவாத அச்சுறுத்தல், படுக்கை அறையில் தெரு நாய், குளியலறையில் குரங்குத் தொல்லை எனக் காரணம் காட்டி, சில நாடுகள் மூட்டை கட்டிச் சென்று விட்டன முடிவில் விளையாடப் போவது, இந்தியாவும், இந்தியாவின் நட்பை நாடும் ஓரிரு நாடுகள் மட்டுமே இதனால், இந்தியர்கள் அதிக அளவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையே காரணம் காட்டி, இந்திய அரசு, இந்த ஆட்சியில் விளையாட்டுத் துறை முன்னேறி உள்ளது என பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்து புளகாங்கிதம் அடையும் 

காமன் வெல்த் போட்டிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஆரம்பத்திலிருந்தே ஊடகங்கள் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறது எத்தனை பேர் எத்தனை முறை குற்றம் சாட்டினாலும்  கூறினாலும் அதை எல்லாம் பிரதமர் கண்டு கொள்வதாய் இல்லை,  அடிக்கும் கொள்ளையில் பங்கு வைத்து பகிர்வதால்  அது பற்றி எல்லாம் கேள்வி எழும்போது ஊழல் நடைபெறவில்லை என்று ஒரே பதிலை தயாராக வைத்திருக்கிறார் பிரதமர். ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகட்டும், மருத்துவ கவுன்சில் முறைகேடாகட்டும், காமன்வெல்த் முறைகேடாகட்டும், தொடர்ந்து நடக்கும் ரயில்வே விபத்துகாளாகட்டும்,  அனைத்திற்கும் ஒரே பதில். 15000 கோடி ருபாய் பெறுமானமுள்ள உணவு தானியங்களை கிட்டங்கிகளில் வீணடித்த சரத்ப்வார் கூட வெட்கமில்லாமல் காமன்வெல்த் முறைகேடுகளை கிண்டலடித்திருக்கிறார். எல்லாம் நீ பாதி நான் பாதி என்ற கொள்கையில் அரசும், ஊழல் வாதிகளும் இணைந்திருப்பதால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இளைஞர்களுக்கு இந்த கிழட்டு சிங்கங்கள் வழி விட்டால் தான் இதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்பதே உண்மை.

Tuesday, September 21, 2010

இதற்கு பெயர் தான்


சமீபத்தில் வெளிநாட்டு ஆய்வு நிறுவனத்தால் வெளியிடபட்ட ஓர் அறிக்கையில் இந்தியாவை பற்றி குறிப்பிட்டிருக்கிற விவரங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இவற் றுள் 18.3 லட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டு வதற்கு முன்பே இறந்து விடுகின்றன. உலகில் குழந்தை இறப்பை கட்டுப்படுத்துவதில் மிகவும் மந்தமாக உள்ள நாடுகளின் வரிசையில் தான் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளதாம். உலகிலேயே 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்கிறது.

ஊட்டச்சத்தின்மை, வாந்தி பேதி, தொற்று நோய்கள், நிமோனியா, சின்னம்மை, மலேரியா போன்ற நோய்களே குழந்தைகள் இறப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை என்ன? மருத்துவ வசதி எந்த அளவிற்கு உள்ளது. அதை ஏழைகள் எளிதில் பெற முடிகிறதா? மருத்துவச் செலவு ஏழைகளுக்கு கட்டுப்படியாகும் வகை யில் உள்ளதா? ஏழைகளுக்கு கிடைக்கும் மருந்தின் தரம் எப்படி உள்ளது? கருவுற்ற தாய்மார் களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து எந்த அளவிற்கு கிடைக்கிறது? கல்வி, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், சுகாதாரம், குடி யிருப்பு எந்த அளவிற்கு ஏழைகளுக்கு உறுதி செய்யப்பட்டது? 

கலாச்சார ரீதியாக மக்களி டையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற விழிப் புணர்வு எந்த அளவு ஊட்டப்படுகிறது? எல்லா வற்றிற்கும் மேலாக இவற்றிற்காக அரசு எந்த அளவு பொது முதலீடு செய்கிறது? இப்படி பல கேள்விகளுக்கும் குழந்தை இறப்பு வீதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த அறிக்கை படம் பிடித்து காட்டுவதுடன் நச்சென்று சொல்கிறது; “ஒவ்வொரு தாய்மார்கள் மற்றும் குழந்தை களின் நலனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிற அரசியல் உறுதியில்லாமல் இலக்கை அடையமுடியாது. உலக நாடுகள் இந்தியாவை  வளரும் நாடு என்று சொல்லுகிறது இதற்கு பெயர் தான் வளரும் நாடா..?
 

Sunday, September 19, 2010

யாரை கேட்பது எங்கே போவது


டிசம்பர் 2000 லிருந்து இன்று வரை நடைபெற்ற 19 ரயில் விபத்துகளில் 810 பேர் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். மே 2009 லிருந்து இந்த 14 மாதங்களுக்குள் 12 ரயில் விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இது போன்ற விபத்துகள் நடைபெற்றவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பவர்கள், அத்துடன் அதை மறந்து விடுகிறார்கள் பெரிய உணவகங்களில் கை கழுவும் இடத்தில் நீர் விரயம் ஆகாமல் இருப்பதற்காக மனிதர் முன் சென்று நின்றவுடன் தண்ணீர் வரத் துவங்குவதும், அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் தண்ணீர் வரத்து நிற்கும் விதத்திலும் சென்சார் என சொல்லப்படும் முறை செயல்படுத்தும் அளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கிறது. சாலையில் பேருந்து இரவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் முகப்பு விளக்குடன் ஒரு வாகனம் வருமானால் பேருந்தின் முகப்பு விளக்குகள் தானாக வெளிச்ச அலை குறைந்து, கூடும் (டிம், பிரைட்) கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. இந்தச் சூழலில் ரயில்களுக்கான சமிக்ஞைகளை (சிக்னல்) முறைப்படுத்த அறிவியலில் மேம்பட்ட முறையைப் புகுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. 

தவிர, மனித உயிர்களை மதிப்பிடுவதிலும் பாகுபாடு காட்டப்படுவது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த மங்களுர் விமான விபத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் மாநில, மத்திய அரசு மற்றும் விமானத்துறை சேர்ந்து மொத்தம் ரூ.78 லட்சம் நஷ்டஈடாக அறிவித்திருக்கிறது. தற்போதைய ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் நடைபெறுகிற சாலை விபத்தில் பலரின் கவனத்தைக் கவர்கிற விபத்துக்கு மட்டும் ரூ.50 ஆயிரமும், ரூ.1 லட்சமும் நஷ்டஈடாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கை முறையில் 1 முதல் 3 லட்சங்கள் என்பது சில நாள்களில் கரைந்து விடக்கூடியவை யாரை கேட்பது எங்கே போவது 

 பங்கு மார்க்கெட் சரிவுக்கும், பன்னாட்டு வியாபாரத்துக்கும், டீசல் விலை உயர்வுக்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக இது போன்ற பொதுமக்கள் உயிரிழப்பு விஷயத்துக்கும் பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பார்க்கிறபோது உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் என்பது கூடாது. முன்பதிவு ரத்தாகும்போது திருப்பியளிக்காமல் குவியும் நிதியிலிருந்தும், தத்கல் முறை பதிவுக்குப் பணம் திருப்பியளிக்கும் நிலைகளே எழுவதில்லை என்ற அடிப்படையில் சேரும் நிதியிலிருந்தும் உடனடியாக பயணிகள் காப்பீட்டுக்காக ஒரு திட்டம் வகுத்து விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சத்துக்குக் குறையாமல் நஷ்டஈடு வழங்க வேண்டும். சாலை விபத்துகளுக்கான நஷ்டஈட்டுக்கும் மாநில அரசுகள் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வகுத்து அரசே செலவை ஏற்று உடனுக்குடன் நஷ்டஈடு ரூ.10 லட்சத்துக்கு குறையாமல்  வழங்க வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.  

Tuesday, September 14, 2010

ஏன் பிறந்தாய் மகனே

குழந்தை இல்லாமல் இன்று பலரும் ஏங்கியிருக்க ஒரு மிருகம் பெற்ற பிள்ளையை பந்தை எறிவது போல்கொடுரமாக தரையில் ஓங்கி அடித்து கொன்றிருக்கிறான் கேரள மாநிலம் ஆம்பழப்புழா வை சேர்ந்த  மது-சுமிதா தம்பதிக்கு இரண்டு மாதத்திற்க்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தைக்கு அகில் தேவ் என்று பெயரிட்டுள்ளனர் பிறந்த போதே அந்த குழந்தைக்கு பல் முளைத்திருக்கிறது இதை பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டிருக்கிறான். அவனோ பற்களுடன் பிறந்த அந்த குழந்தையால் தந்தை உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூற அதை நம்பி அந்த குழந்தையை கொல்ல முடிவெடுத்து  மது அருந்திய மது மதி கெட்டு மனைவி இல்லாத நேரம் பார்த்து ஏன் பிறந்தாய் மகனே என்று கொஞ்சம் கூட ஈவு இறக்கமின்றி தரையில் ஓங்கி அடித்து கொன்றுள்ளான். சத்தம் கேட்டு ஓடி வந்த சுமிதா அலறிதுடித்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றள்ளார்  மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர் காவல் துறைக்கு தகவல் சொல்ல இப்பொழுது மது சிறையில் பாழாய் போன மூடநம்பிக்கைக்கு இன்னும் எத்தனை குழந்தைகளின் உயிரிழக்க போகிறதோ....? சென்ற மாதம் அப்துல் கபூர் என்ற கொடூரன் ஒரு குழந்தையை மூட நம்பிக்கைக்கு பலியாக்கிகனான் இப்பொழுது மது என்ற கொடூரன். என்றைக்கு தான் இவர்கள் திருந்த போகிறார்களோ....?

Monday, September 13, 2010

நான் போகிறேன் மேலே மேலே

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு (எல்.பி.ஜி.,) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, திட்டத்தை துவக்க திட்டமிட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐ.மு.கூட்டணி, தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறதசாம். தற்போது இத்திட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அடுத்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று திட்டத்தை துவக்க யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளதாம். இதன்படி ஆண்டுதோறும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 35 லட்சம் குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும். சமையல் காஸ் இணைப்பு பெற இப்போது நுகர்வோர், ஒரு சிலிண்டருக்கு 1,250 ரூபாய் டிபாசிட் தொகையும், ரெகுலேட்டருக்கு ரூ.150ம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு செலவாகும் 1,400 ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்த வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.490 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். இன்னும் ஐந்தாண்டுகளில் மொத்தம் ஐந்தரை கோடி சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் பட உள்ளதாம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, மண்ணெண்ணெய் மற்றும் விறகுகள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை தூய்மைபடுத்துவதற்கும் வழி ஏற்படுமாம். இதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாம். இதில், இலவசமாக வழங்கப்படும் 35 லட்சம் காஸ் இணைப்புகளும் அடங்கும். இத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசு, இலவச சமையல் காஸ் இணைப்புடன், காஸ் அடுப்பையும் இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

தங்கம், உணவு பொருட்கள், காய்கறி என ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது  குடும்ப விழாக்களை நடத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் திண்டாடி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் திருமணம், கிரகப்பிரவேசம், பூப்புனித நீராட்டு என எல்லா ஊர்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறான குடும்ப விழாக்களை நடத்த நடுத்தர மற்றும் ஏழை மக்கள் திண்டாடி வருகின்றனர். காரணம் எல்லா பொருட்களின் விலை ஏற்றம் தான். உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதிலும் உணவு பரிமாற அத்யாவசியமான வாழை இலை ஒன்றின் விலை 5 முதல் 6 ரூபாய் வரை உள்ளது. இந்த விலைக்கு வாழை இலை விற்பனையாவது இதுதான் முதன்முறை.மேலும் திருமணத்தில் முக்கிய இடம் பிடிக்கும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சென்ற ஆண்டு இதே நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1487 ரூபாய். நேற்றைய விலை  1788 ரூபாய். இது கிராமிற்கு 301 ரூபாய் அதிகம்.இதுதவிர விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூவின் விலை 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் மண்டபம், சமையல் ஆட்கள், போட்டோ, வீடியோ கிராபர்கள், வேன், கார், துப்புரவு தொழிலாளர் என எல்லா தரப்பிலும் கடுமையாக செலவு தொகை உயர்ந்துவிட்டது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் விழாக்களை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலானோர் கடன் வாங்கியே விழாக்களை நடத்தும் சூழல் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியப்போக்கு தான்.அரசு தரும் இலவச பொருட்களை போட்டி போட்டு வாங்கும் மக்கள் விலைவாசியின் கடுமையான உயர்வுக்கு இந்த இலவச பொருட்கள் தான் அடிப்படை காரணம் என்பதை உணராவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சூழலை சந்திக்க நேரிடும் நான் போகிறேன் மேலே மேலே என்று விலை வாசி எகிறிக்கொண்டே போகிறது அதை கட்டுப்படுத்தவேண்டிய  அரசுகள் தூங்கி வழிகின்றது என்பதே உண்மை

Wednesday, September 8, 2010

நாட்கள் நகர்ந்து வருடங்கள்

வேலை வாய்ப்பில்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களின் வீட்டுக் கதவை தட்டி, தி.மு.க., அரசு ஆசிரியர் வேலை வழங்கி வருகிறது,'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் தமிழ் ஆசிரியர்கள் 441 பேர், ஆங்கில ஆசிரியர்கள் 312 பேர், கணித ஆசிரியர்கள் 175 பேர், அறிவியல் ஆசிரியர்கள் 318 பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 667 பேர் என 1,913 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனராம். மொத்தம் 56 ஆயிரத்து 471 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்களாம். மேலும், தற்காலிக அடிப்படையில் பணியாற்றிவந்த 40 ஆயிரம் பேரை, பணி நிரந்தரம் செய்துள்ளார்களாம். மொத்தத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாம். இதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

           இதையும் செய்தியையும் அமைச்சர் பார்க்க வேண்டும்

சேலத்தை சேர்ந்த 57வயது பெண்ணுக்கு, அரசு பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கான உச்சபட்ச வயது வரம்பு கடந்த 2000ம் ஆண்டில் தளர்த்தப்பட்டது. இதனால், உரிய தகுதிகளை உடையவர்கள், 58 வயதுக்குள் எந்த வயதிலும் ஆசிரியர் ஆகலாம். சமீபத்தில் நடைபெற்ற கவுன்சலிங்கில், சேலத்தைச் சேர்ந்த 57 வயது மாலதி என்பவர் பங்கேற்றார். அவர் 9 மாதம் மட்டுமே பணியாற்றுவார். அதன்பின், ஓய்வு பெற்று விடுவார். அடுத்து
நாமக்கல்லைச் சேர்ந்த 51 வயதான ராமசாமிக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவர் ஒரு தனியார் பள்ளியில் 2 ஆண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.  இன்னும் 7 ஆண்டுகள்தான் இவரால் பணியாற்ற முடியும். இந்த மாதிரி எந்த மாநிலத்திலும் கதவை தட்டி வேலை கொடுக்க மாட்டார்கள் தற்போது படித்து விட்டு புதிதாக பதிவு செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் நாட்கள் நகர்ந்து வருடங்கள் கழித்து கொடுத்து என்ன பயன்.

Tuesday, September 7, 2010

இரும்பிலே ஒரு இதயம்

மத்திய உணவுக்கழகத்தின் கிடங்குகளில் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங் கள் மக்கி மண்ணாவது குறித்து உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டது. மேலும் வீணாகும் இந்த உணவுதானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்குமாறும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வெறும் ஆலோசனைதான் என்றும் இதை செயல்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தார். உணவுதானியங்களை எடுத்து ஏழை மக்களுக்கு விநியோ கிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், தலையில் உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் பத்திரிகைகளில் வந்த பவாரின் அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்துக்கொண்டு பவாருக்கு கண் டனம் தெரிவித்துள்ளனர். “உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12ம் தேதி கூறியது ஆலோசனையல்ல; அது ஒரு உத்தரவு என்பதை உங்கள் அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஒருபுறத்தில் மத்திய உணவுக்கழக கிடங்கு களில் தானியங்கள் எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் நிலையில், வறுமைக்கோடு கணக்கீட்டில் பல்வேறு மோசடிகளைச் செய்து பொது விநியோக முறைக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கும் உணவுதானிய அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. நிதிநிலை அறிக்கையிலும் உணவு மானியம் வெட்டப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்க ளுக்குத் தான் மானிய விலையில் உணவுதானியம் வழங்க முடியும் என்று வம்படி வழக்கு நடத்துகிறது மத்திய அரசு. ஆனால் அவர்களுக்கே கூட முறையாக உணவுதானியம் வழங்கப்படுவது இல்லை என்பதுதான் உண்மை. வறுமைக் கோட் டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, மேலே உள்ளவர்களுக்கும் உணவுதானியத்தை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  "நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதைப் போல், வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்?என்று பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க முடியாத நிலையில் சுமார் 77 சதவீத மக்கள் இருப்பதாக மத்தியஅரசு நியமித்த குழுவே கூறியுள்ள நிலையில், அத்தகைய வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவுதானியத் தை வழங்காமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலாவது மத்திய அரசின் வறட்டுப்பிடிவாதம் நீங்க வேண்டும். வீணாகும் உணவு தானியங்களை ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க முன்வர வேண்டும். மேலும் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடிகளை சலுகையாக வாரி வழங் கும் அரசு பாதுகாப்பான, நவீன உணவு கிடங்கு களை உருவாக்கி உணவு தானியங்களை பாதுகாத்து வழங்க முன்வர வேண்டும்.மத்திய அரசு நியமித்த குழு ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது ஆனால் மன்மோகன்சிங்கோ அதற்கு மாறாக ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறார். எலிகள் திண்பதை அனுமதிக்கும் அரசு, நாட்டு மக்களுக்கு உச்சநீதி மன்றம் குட்டிய பிறகும் குடுக்க மறுப்பது  மத்திய அரசானது இரும்பிலே ஒரு இதயம் படைத்தது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Monday, September 6, 2010

உசிரே போகுது உசிரே போகுது

கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடருமேயானால்,
அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா  எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக, சில பணிகளில் ஈடுபட்ட போது, காவல் துறைக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது அடையாள அட்டைகளை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறார் தலைமைக் காவலர்.

சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல் துறையின் அனுமதி பெற்று கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தி.மு.க. விற்க்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக அ.தி.மு.க., சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை, தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் இந்த அம்மாவுக்கு இப்பதான் மாணவர்கள் மேல கரிசனம் வருமாம்.

2000ம் ஆண்டில்  இவர்கள் கட்சிகாரர்கள் 4 கல்லூரி மாணவிகளை உயிரோடு வைத்து ஈவுஇறக்கமின்றி எரித்தார்களே அப்போது எங்கே போனார் இந்த அம்மையார்.அப்போதெல்லாம் ஒரு கண்டணம் கூட தெரிவிக்க வக்கில்லை இப்போது தேர்தல் வரும் வேளையில் மக்களை திசை திருப்ப அறிக்கை மேல் அறிக்கை விடுகிறார். இவர்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.  

உசிரே போகுது உசிரே போகுது  
என்று தீ வைத்து கொளுத்தபட்ட போது அந்த மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள் என்பதை ஓட்டு போடும் போது மக்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

Saturday, September 4, 2010

பேசுகிறேன்... பேசுகிறேன்

முன்பு 80 போலிஸ்காரர்களை சுட்டு கொன்ற போதே அரசுகள் விழித்திருக்க வேண்டும். ரயில் கவிழ்ப்புக்கு பிறகாவது தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களை துரித படுத்தியிருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது பேச்சுவார்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது பீகார் அரசு.  நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளும், தீவிரவாதிகளும் தான் காரணம். பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற 4 போலீஸ்காரர்களில் ஒருவரை நக்சலைட்கள் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள்  நடந்த சம்பவம் மிகவும் வருத்தபட வேண்டியது. இந்தப் படுகொலையை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் பல முறை அறிவித்தும். அவற்றை எல்லாம் அரசுகள் காதில் வாங்கி கொள்ளவில்லை போலீசார் மற்றும் துணை ராணுவப் படையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தான், நக்சலைட்களின் தாக்குதலுக்கு இரையாகின்றனர். தீவிரவாதிகள் தயவு காட்டினால் தான், போலீசார் வாழ முடியும் என்ற சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிவிட்டன. இதுபோன்ற படுகொலைகள் தொடர்வது தடுக்கப்பட வேண்டுமென்றால், நக்சலைட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அரசு தொடர்ந்து அமைதியாக இருந்தால், சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவர். ஒருவேளை பேச்சு வார்த்தை தொடங்கி பேசுகிறேன்... பேசுகிறேன் என்று இழுத்து அடிக்காமல் ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் தக்குதல்களை தீவிரபடுத்தி அவர்களை ஒடுக்க வேண்டும்.

Thursday, September 2, 2010

ஒன்றா ரெண்டா.....

ஐ.பி.எல். போட்டிக்கு தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமம் ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யூ. எஸ்.ஜி.) நிறுவனத்துக்கு 10 ஆண்டுக்கு டெலிவிஷன் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கப்பட்டதில் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும் இதில் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. வருமான வரி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த பணத்தில் ரூ.80 கோடிக்கு ஜெட் விமானம் வாங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக அதன் தலைவர் பதவியில் இருந்து லலித்மோடி நீக்கபட்டார். இது தொடர்பாக அவர் மீது கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை அவர் சார்பில் வழக்கறிஞர், லலித்மோடி வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும். அவருக்கு மும்பை தாதாக்களால் மிரட்டல் இருப்பதாக கூறி அவர் விசாரணைக்கு வர இயலாது என்று கூறியுள்ளாராம் இப்பொழுது வாரியம் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாம். ஏன் இத்தனை நாள் இந்தியாவுல தான் இருந்தாரு அப்ப எல்லாம் மும்பை தாதாக்கள் மிரட்டல் இல்லையாம், இப்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிட்டாரு, அவர் மீது குற்றசாட்டு, விசாரணை இருக்கும் போது இவர் எப்படி வெளிநாடு போகலாம் இது போன்ற அரசியல்வாதிகள் கோடி கோடியா கொள்ளை அடித்துவிட்டு வெளிநாடு செல்லலாம் ஆனால் ஒரு சாதாரண குடி மகன் ஒரு சின்ன வழக்கில் கைதானால் கூட வெளியூருக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தபடுகிறது,  இனி அடுத்து வெளிநாடு செல்ல இருக்கிறார்கள் காமன் வெல்த் போட்டி அமைப்பாளர்கள் அதில் சம்பத்தபட்ட அமைச்சர், அடிகாரிகள் அனைவரும் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர். இந்திய முன்னாள் மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தான் தேசாய் மட்டும் விதிவிலக்காக மாட்டி கொண்டார் அவர் அரசியல்வாதி இல்லை அதனால் தான் கைதாகி உள்ளார். லலித் மோடி, சசிதரூர், கேத்தான் தேசாய், ஆ.ராசா ...... அடுத்து யாரோ இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த லட்சணாத்தில் சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வர ஏற்பாடு செய்பவர்களாம் எல்லாம் கொடுமையிலும் கொடுமை, இவர்கள் செய்த ஊழல்கள் ஒன்றா இரண்டா.... எல்லாம் சொல்லவே வாழ் நாள் போதுமா.....  

Wednesday, September 1, 2010

யாருக்காக

சரண் அடையும் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்களுக்கு, ரூபாய் 2 லட்சம்  தருவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. சரணடையும் போது அவர்கள் ஒப்படைக்கும் ஆயுதங்களுக்கு ஏற்ப பணம் தரப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அவரகள்  பணத்துக்காக போராடுகிறார்களா என்ன...? இல்லை தனி நாடு கேட்டு போராடுகிறார்களா...?  சொந்த மண்னில் வாழ வழியற்று, உரிமைகள் மறுக்க பட்டு, தங்களது விளை நிலங்கள் பறிக்க பட்டு, விவசாய நிலங்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்க படுவதால் தான் இந்த அமைப்புகள் ஆயுதமேந்தி போராடுகின்றனர். அவர்கள் பாதை தவறு தான், அவர்கள் போராட்டம் கூட அரசை எதிர்த்து தான் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் ரயில் கவிழ்ப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு பொது மக்கள் உயிர் பலி வாங்கியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை தான். அதற்கு தீர்வாக அரசு பணம் தந்தால் மட்டும் எல்லாம் முடிந்து விடுமா என்ன...? அவர்கள் பிரச்சனை என்ன என்பதை காது கொடுத்து கேட்க எந்த அரசும் தயாராக இல்லை என்பதே உண்மை.  இது போன்ற குள்ளநரி  வேலைகளில் ஈடுபட்டு அரசு போராட்டகாரர்களை வீழ்த்த நினைப்பதை விடுத்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்குமானால் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு வேலை இருக்காது தண்டகாரண்யா, பிளாச்சிமடா, போன்ற பிரச்சனைகள் யாரால்...? ஆளும் அரசுகளால் தான் மாவோயிஸ்டுகளால் அல்ல, தன் மீது உள்ள தவுறுகளைஆளும் அரசுகள் திருத்தி கொள்ள வேண்டும். எங்கே உரிமைகள் மறுக்க படுகின்றதோ அங்கே புரட்சி வெடித்துக்கொண்டே தான் இருக்கும். என் நாடு என் மக்கள் என்று நினைக்கும் அரசியல் வாதிகள் வரும் வரை இந்த போராட்டங்கள் முற்று பெற போவதில்லை.சரண் அடையும் தீவிரவாதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கபடும் என்றும் பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3000 உதவி தொகையாக வழங்கபடும் என்று அரசு அறிவித்துள்ளது. இது போன்று முன்பே செய்திருந்தால் பல இளைஞர்கள் பாதை மாறியிருக்க மாட்டார்கள் இப்போதாவது, இது போல செயல் படுத்த முன் வந்ததே பெரிய பாராட்டுக்குரியது தான். மற்ற திட்டங்கள் போல இதிலும் அதிகாரிகள் ஊழல் செய்யாமல் இருந்தால் சரி, இல்லை என்றால் அவர்கள் பழையபடி ஆயுத பாதைக்கு சென்று விடுவார்கள் இது போன்ற நல்வழி படுத்தும் திட்டங்கள் யாருக்காக என்பதில் அரசுகள் கவனமாக இருக்க வேண்டும.