Sunday, September 19, 2010

யாரை கேட்பது எங்கே போவது


டிசம்பர் 2000 லிருந்து இன்று வரை நடைபெற்ற 19 ரயில் விபத்துகளில் 810 பேர் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். மே 2009 லிருந்து இந்த 14 மாதங்களுக்குள் 12 ரயில் விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இது போன்ற விபத்துகள் நடைபெற்றவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பவர்கள், அத்துடன் அதை மறந்து விடுகிறார்கள் பெரிய உணவகங்களில் கை கழுவும் இடத்தில் நீர் விரயம் ஆகாமல் இருப்பதற்காக மனிதர் முன் சென்று நின்றவுடன் தண்ணீர் வரத் துவங்குவதும், அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் தண்ணீர் வரத்து நிற்கும் விதத்திலும் சென்சார் என சொல்லப்படும் முறை செயல்படுத்தும் அளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கிறது. சாலையில் பேருந்து இரவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் முகப்பு விளக்குடன் ஒரு வாகனம் வருமானால் பேருந்தின் முகப்பு விளக்குகள் தானாக வெளிச்ச அலை குறைந்து, கூடும் (டிம், பிரைட்) கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. இந்தச் சூழலில் ரயில்களுக்கான சமிக்ஞைகளை (சிக்னல்) முறைப்படுத்த அறிவியலில் மேம்பட்ட முறையைப் புகுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. 

தவிர, மனித உயிர்களை மதிப்பிடுவதிலும் பாகுபாடு காட்டப்படுவது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த மங்களுர் விமான விபத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் மாநில, மத்திய அரசு மற்றும் விமானத்துறை சேர்ந்து மொத்தம் ரூ.78 லட்சம் நஷ்டஈடாக அறிவித்திருக்கிறது. தற்போதைய ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் நடைபெறுகிற சாலை விபத்தில் பலரின் கவனத்தைக் கவர்கிற விபத்துக்கு மட்டும் ரூ.50 ஆயிரமும், ரூ.1 லட்சமும் நஷ்டஈடாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கை முறையில் 1 முதல் 3 லட்சங்கள் என்பது சில நாள்களில் கரைந்து விடக்கூடியவை யாரை கேட்பது எங்கே போவது 

 பங்கு மார்க்கெட் சரிவுக்கும், பன்னாட்டு வியாபாரத்துக்கும், டீசல் விலை உயர்வுக்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக இது போன்ற பொதுமக்கள் உயிரிழப்பு விஷயத்துக்கும் பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பார்க்கிறபோது உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் என்பது கூடாது. முன்பதிவு ரத்தாகும்போது திருப்பியளிக்காமல் குவியும் நிதியிலிருந்தும், தத்கல் முறை பதிவுக்குப் பணம் திருப்பியளிக்கும் நிலைகளே எழுவதில்லை என்ற அடிப்படையில் சேரும் நிதியிலிருந்தும் உடனடியாக பயணிகள் காப்பீட்டுக்காக ஒரு திட்டம் வகுத்து விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சத்துக்குக் குறையாமல் நஷ்டஈடு வழங்க வேண்டும். சாலை விபத்துகளுக்கான நஷ்டஈட்டுக்கும் மாநில அரசுகள் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வகுத்து அரசே செலவை ஏற்று உடனுக்குடன் நஷ்டஈடு ரூ.10 லட்சத்துக்கு குறையாமல்  வழங்க வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.  

4 comments:

Ramgopal said...

நன்றாக எழுதுகிறீர்கள். பத்தி பிரித்து எழுதவும்.

இப்படி ஒரே பாராவாக எழுதுவது வாசிக்க அயர்ச்சியை தருகிறது.

ராசராசசோழன் said...

நியாயமான கேள்வி...இன்னும் நிறைய இருக்கு...பதில் சொல்லத்தான் எந்த அரசியல்வாதிக்கும் யோக்கியதை கிடையாது.

mubarak hussain said...

while travelling in flights passenger pays insurance so the main share is from insurance company, state and central government pays only 1 or 2 lakhs only, while traveling in the road transport or train passenger didnt pay any insurance, goverment must take some amount for insurance.

ers said...

உங்கள் படைப்புக்களை வரவேற்கிறோம்...

மீண்டும் எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க நன்றி.

தமிழ்
ஆங்கிலம்